முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தனியாகவும், ஆளுநர் கிரண்பேடி தனியாகவும் தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டனர். அதனால் ஊழியர்கள் அச்சத்துடன் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து கொண்டிருந்தனர். பின்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பனிப்போர் யுத்தம் நடந்ததால் அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அதிகாரிகள் சரிவர பணிக்கு வருவதில்லை. இதனிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அன்றாட அலுவல்களில் தலையிட்டு அதிகார மீறலில் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.
அதையடுத்து முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வினிகுமாருடன், நேற்று காலை தலைமை செயலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நிர்வாக சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, பட்ஜெட் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு சென்று பார்த்தவர் பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில் வராதவர்கள் கடிதம் கொடுத்துவிட்டு விடுப்பு எடுத்திருப்பதாகவும், சிலர் தாமதமாக வருவதற்கு முன் அனுமதி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர். அதேசமயம் முன் அனுமதியின்றி தாமதமாகவும், விடுப்பு கடிதம் கொடுக்காமல் விடுமுறை எடுப்பதையும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர், தலைமை செயலகத்திலேயே இப்படி செய்யலாமா..? என கடிந்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலருக்கு உத்தரவிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “ ' நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அரசு நிர்வாகத்தை சரி செய்ய தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தோம். சில துறைகளில் எழுத்தர்கள், கண்காணிப்பாளர்கள் வரவில்லை. விசாரித்ததில் சில அதிகாரிகள் அவர்களுக்குள் கூட்டு வைத்துக்கொண்டு விடுப்பு எடுத்துள்ளனர்.
பணிக்கு வராதவர்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ள விடுப்பு கடிதத்தை கொடுக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பள உயர்வு, பஞ்சப்படி உயர்வு, வாடகைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசு ஊழியர்கள், மக்களுக்கான சேவையையும் உரிய நேரத்தில் செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யவே முதல்வர், அமைச்சர்கள், செயலர்கள், அரசுஊழியர்கள் உள்ளோம். தொடர்ந்து அமைச்சர்கள் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்வர்” என்றார்.