இந்தியாவில் மட்டும் வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் மர்மமாக உயிரிழப்பது சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று சண்டிகரில் மருத்துவம் படித்து வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்-ல் (M.D General medicine) முதுநிலை ஆராய்ச்சி படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார் ராமேஸ்வரத்தை சேர்ந்த மாணவர் கிருஷ்ண பிரசாத். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவர் கிருஷ்ண பிரசாத் இன்று விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், அவரது அறைத்தோழனும், அதேக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மற்றொரு தமிழக மாணவன் முகநூலில் கிருஷ்ண பிரசாத்தின் மரணத்திற்கான காரணம் இதுவாகதான் இருக்கும் என கொளுத்திப்போட விவகாரம் பெரிதாகியுள்ளது. அந்த மாணவரின் முகநூல் பதிவில் கூறியதாவது,
"இந்தக் கல்லூரியில் சேர்ந்த 10வது நாளிலிருந்தே எனக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருக்கு. எனக்கு இந்தித் தெரியாததால படிப்பை முடிக்க முடியுமான்னுத் தெரியலை என பிரசாத் என்னிடம் கண்கலங்கினார். அதன் பிறகு அவர் வேற டிபார்ட்மெண்டிற்கு மாற்றப்பட்டார். இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் மச்சி.! ஒன்னுமே புரியலைடா..! என புலம்புவான். நாளாக நாளாக இது சரியாகும் என நான் நினைச்சிருந்தேன்.
ஒரு நாளும் சரியானது கிடையாது. அனைத்தும் இந்தியில் என்பதால் திணறித்தான் போனோம். இந்த மொழிக் கொடுத்த அழுத்தமே அவனுக்கு முடிவைக் கொடுத்திருக்கின்றது என நினைக்கின்றேன்." என்றிருக்கின்றது அந்தப் பதிவு. அதே வேளையில், " மொழி மட்டும் இறந்த கிருஷ்ண பிரசாத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்திருக்காது. அதைத் தாண்டி வேறேதாவது இருந்திருக்கும்." என மரணத்தில் சந்தேகத்தை கிளப்புகின்றனர் அவரின் பெற்றோர்கள்.
இதனிடையே, கிருஷ்ண பிரசாத்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
மேலும், அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிடுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.