சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்தார். ரஜினியின் பேச்சுக்கு அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து, பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மன்னிப்பு கேட்க முடியாது, உண்மையைத்தான் சொன்னேன் என்று கூறியதால், அவரது பேட்டியும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியது.
உண்மையில் என்ன நடந்தது என்று பெரியார் ஆதரவாளர்கள் தகவல்களை வெளியிட்டனர். நக்கீரன் யூ ட்யூப் சேனலில் திராவிடர் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சிலையை எடுத்து வந்த வேனின் பொறுப்பாளரான திருச்சி செல்வேந்திரன் ஆகியோரின் பேட்டியும், அந்த ஊர்வலம் குறித்து பெரியார் தெரிவித்த கருத்தும் வெளியிடப்பட்டது. இந்த காணொளிகள் தமிழக அளவில் வைரலானது. அதேபோல நியூஸ் 18 தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்ட ''என்ன செய்தார் பெரியார்?'' என்ற காணொளியும் வெளியாகி வைரலானது. இதை கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.