அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போது ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு இன்று (28.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமின் மனுவை பரிசீலிக்க முடியும். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஜாமின் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது.