சினிமாத்துறையினரை விமர்சித்து வந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தற்போது அதே ரஜினியுடன் கூட்டணி வைக்க முயல்கிறார். இது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹல்லி தொகுதியில் போட்டியிடுவார். அந்த தொகுதியில் கன்னடம் பேசும் மக்கள் அதிகமாகவுள்ளதால் அங்கு போட்டியிடுவார்கள் என்கிறார்கள். அந்த தொகுதி வேண்டாம் என்றால் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்கிற தகவல்கள் வெளிவருகின்றன.
வேலூர் மாவட்டத்தை எதனால் தேர்வு செய்வார் என விசாரித்தபோது, இரண்டு ஆண்டுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கச்சொல்லி ரஜினி உத்தரவிட்டார். அப்போது தமிழகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1.60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து முதலிடத்தில் இருக்கிறது வேலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ரஜினி ரசிகர்கள் மட்டும்மல்ல, மன்ற உறுப்பினர்களும் அதிகம். அதோடு ரஜினி பிறந்தநாளில் லட்சங்களை செலவு செய்து பல நலத்திட்ட உதவிகளை வழங்குவது இந்த மாவட்டத்தில் தான். அதோடு, பூத் கமிட்டி வரை இந்த மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் அமைத்துள்ளது அதனால் தான் என்கிறார்கள்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகள் இருந்தன. தற்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டுவிட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகள், வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள் என உள்ளன.
இதில் எந்த தொகுதி ரஜினிக்கு சாதகமாக இருக்கும் என அரசியல் கணிப்பாளர்களிடம் கேட்டபோது, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் போன்றவை சிறுபான்மையின மக்கள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். ரஜினி தன் மீது காவிச்சாயம் பூசிக்கொள்ளும் வகையில் சிறுபான்மையின மக்கள் எதிர்க்கும் குடியரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு, ஆன்மீக அரசியல் போன்ற கருத்துக்களால் அவருக்கு சிறுபான்மையின வாக்குள் கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. அதனால் அங்கு நிற்க வாய்ப்பு குறைவு. மீதியிருப்பது திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிகள்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம் இரண்டும் தனித்தொகுதிகள். அதனால் அங்கு நிற்க முடியாது. மீதி வேலூர், அணைக்காட்டு, காட்பாடி எனவுள்ளன. இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தனி தொகுதி என்பதால் போட்டியிட முடியாது. மீதியிருப்பது சோளிங்கர், ஆற்காடு, இராணிப்பேட்டை ஆகியவை தான். இதில் இராணிப்பேட்டையில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளார்கள். அதனால் அங்கு ரஜினி நிற்க சாத்தியம்மில்லை. மீதியிருப்பது சோளிங்கர், ஆற்காடு மட்டுமே.
ரஜினி தேர்தலில் நிற்பதாக இருந்தால், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, சோளிங்கர், ஆற்காடு மட்டுமே உள்ளன. ரஜினி நகரங்கள் நிறைந்த பகுதியில் நின்றால் டெபாசிட் வாங்கலாம், அவ்வளவு தான், வெற்றி பெற முடியாது. கிராமங்கள் நிறைந்த தொகுதி என்றால் தான் வெற்றி பெற முடியும். அதன்படி சோளிங்கர், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் போன்றவை தான் அவர் நிற்க சாதகமாகவுள்ள தொகுதிகள் என்கிறார்கள்.
ரஜினி வேலூர் மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது தொடர்பாக உலாவரும் கருத்துக்கள் குறித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.செ சோளிங்கர் ரவியிடம் கேட்டபோது, தலைவர் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவர் தொடங்கிய பின் தான் அதுப்பற்றி பேச முடியும். பத்திரிக்கைகள் சொல்வது போல, எங்கள் தலைவர் வேலூர் மாவட்டத்தில் போட்டியிட நினைத்தால் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெற வைப்போம் அதை சபதமாகவே சொல்கிறேன் என்றார்.