மதுரையில் சிக்கந்தர்சாவடி பகுதியில் போலீசார் இன்று நடத்திய என்கவுன்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். ரவுடிகளை சரண் அடையுமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரவுடிகள் போலீசாரை தாக்க முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து 2 ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் நிருபர்களிடம் பேசுகையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க சிக்கந்தர் சாவடி பொன்வேல் நகருக்கு செல்லூர் போலீசார் குழு வந்தனர். இந்நேரத்தில் பிஸ்டல் வைத்து தாக்க முயற்சித்தனர். ரவுடிகள் சுட முயன்றதை அடுத்து தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்யப்பட்டது. ஒரு போலீசாரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது விசாரித்து வருகிறோம். சிறிது நேரத்தில் முழு விவரத்தை தெரிவிக்கிறோம் என்றார்.
மதுரை மாவட்டம் வரிசியூர் அருகே உள்ள பொட்டப்பனையூரைச்சேர்ந்தவர் முத்து இருளாண்டி. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முத்து இருளாண்டி தலைமறைவாக இருந்து வந்தார். முத்து இருளாண்டி மீது மதுரை தெப்பக்குளம், அவனியாபுரம், விளக்குத்தூண், செல்லூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல், ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
சகுனி கார்த்திக் மதுரை காமராஜபுரத்தை சேர்ந்தவர். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முத்து இருளாண்டி தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளி என்கிற வெள்ளைக்காளி என்பவரின் குழுவைச் சேர்ந்தவராக இவர் அடையாளம் காணப்படுகிறார். தெப்பக்குளம், விளக்குத்தூன், கீரைத்துறை, செல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளன.