
அண்மையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததால் தமிழகத்திற்கான கல்வி நிதியை முடியாது' என தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் பேசுபொருளான நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த கருத்துக்கு, குறிப்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் 'கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை இந்த ஆண்டு தற்போது வரை தொடங்கவில்லை' என கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று இந்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது '2021 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசே முழு தொகையை ஒதுக்குகிறது' என தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை படிக்க வைப்பதற்கு தமிழகத்திற்கு ஒதுக்குவதற்கான நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. எனவே 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிப்பதற்கான நிதியை மத்திய அரசு தரவில்லை. பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை' என தெரிவித்தார்.
அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில் 'கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது' என குற்றச்சாட்டுடன் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.