
மதுரையில் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழா இன்று நடைபெற்றது. இதில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இளைஞர்களிடம் இருந்து போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மதுரை ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு காலை முதலே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்பொழுது ஆனையூர் பேருந்து நிலைய பகுதியில் அந்த சமூதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெரிய கொடிகளுடன் மூன்று பேர், நான்கு பேர் என ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முன்பே இளைஞர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்ட நிலையில் போலீசார் எச்சரிக்கையும் மீறி அது தொடர்ந்தது. இதனால் காவல்துறையினர் சிலர் இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யத் தொடங்கினர். போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்வது அறிந்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் கூடல்புதூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.