
நாளை நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், திட்ட செயலாக்கத்துறை செயலாளர் ரமேசந்த் மீனா, முதலமைச்சரின் தனி செயலாளர்கள் உமாநாத் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேச உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (23.05.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் காலை 10 மணியளவில் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்திருந்த அவரை அமைச்சர்கள் மற்றும் மேயர் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சோனியா காந்தியை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இடம்பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆளுநர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொழுது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அதில் ஒரு மனுதாரராக இணைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.