Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பம்; சித்தப்பாவை கொலை செய்த இளைஞன்!

Published on 23/05/2025 | Edited on 23/05/2025

 

 young man incident his relative who opposed his love!
விக்னேஷ் - வேல்மணி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள காசி மட தெருவில் காளிதாஸ் என்பவர் கடந்த ஆறு வருடங்களாக அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் இவரது உறவினரான பாண்டிச்சேரியை சேர்ந்த மணி என்கிற வேல்மணி(23) என்பவர் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  காளிதாஸின் வீட்டில் தங்கி வேலை செய்யும் பொழுது காளிதாசன் அண்ணன் கோவிந்தராஜின் மகளுக்கும், வேலுமணிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், வேல்மணிக்கும் கோவிந்தராஜன் மகளுக்கும்  உறவுமுறையில் அண்ணன் தங்கை என்பதால் இருவரின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பாக காளிதாஸ் வேல்மணியை கண்டித்து கடையில் இருந்து வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால் காளிதாஸ் மீது கோபமடைந்த மணி நேற்று(22.05.25) தேதி இரவு 11 மணியளவில் கடையில் தனியாக இருந்த காளிதாஸை கொலை செய்யும் நோக்கத்தோடு சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை இருசக்கர வாகனத்தில் உடன் அழைத்துக் கொண்டு அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். 

பின்னர் வேல்மணி மட்டும் கடைக்குள் சென்று காளிதாஸை கத்தியால் மாறி மாறி தலை, கை கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் காளிதாஸ் சம்பவ இடத்திலே இறந்து விட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காளிதாஸின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் கொலை வழக்குப் பதிவு பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவின் பேரில் சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் அவர்களின் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், உதவி ஆய்வாளர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு  குற்றவாளியை தேடி வந்தனர். இந்த  நிலையில் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மணி என்கிற வேல்மணியை பாண்டிச்சேரி வில்லியனூர் அருகிலும், விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியிலும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்தில்  சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

சார்ந்த செய்திகள்