வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த 4 வயதேயான மாணவி திவ்யதர்ஷினி, ஜூலை 9ந்தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றபோது தவறி கீழே விழுந்து ஆட்டோ சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்திற்கு காரணம் அதிக மாணவர்களை ஏற்றி சென்றதே என்று பொதுமக்கள் குற்றசாட்டு தெரிவித்தனர். இதனடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் வேலூர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் லட்சுமி நாராயணன் உத்தரவின் பேரில், ஜீலை 10ந்தேதி காலை அதிரடியாக வாணியம்பாடியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், ஆய்வாளர் ஞானவேல் ஆகியோர் வாணியம்பாடி நியூடவுன், செட்டியப்பனூர் கூட்டு சாலை, ஜனதாபுரம் ஆகிய இடங்களில் பள்ளி வாகனங்கள மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை நடத்தியபோது, பல வாகனங்கள் குறிப்பிட்டதை விட அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வாகனங்களை பிடித்தனர். அதில் பள்ளி வேன்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பேருந்துகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டு, விதியை மீறி அதிக பிள்ளைகளை ஏற்றி சென்றதாக 13 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர் அதிகாரிகள்.

பள்ளி, கல்லூரி பேருந்துகளில் உட்கார இடம்மில்லாமல் நின்றுக்கொண்டு செல்கிறார்கள். அவைகளை சோதிக்காமல், விட்டுவிட்டு ஆட்டோக்களை மட்டும் பிடித்து அபராதம் விதிப்பது எந்த விதத்தில் நியாயம். அந்த வாகனங்களையும் சோதனை நடத்த வேண்டும் என வேண்டுக்கோள் விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.