Skip to main content

சேலத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

சேலத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் அம்மாபேட்டை சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் தனசேகரன் (32). பிரபல ரவுடி. அம்மாபேட்டை பாரதி நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு அவருடைய கடைக்குச் சென்ற தனசேகரன், அவருடைய கூட்டாளி ராகதேவன் ஆகியோர் பத்மநாபனிடம் கல்லாவில் இருக்கும் பணத்தைக் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டினார். 


அவர் தர மறுக்கவே, கடையில் இருந்த சமையல் பாத்திரங்களை அடித்து நொறுக்கினார். அதை தடுக்க வந்த பத்மநாபன் மனைவியின் வயிற்றில் உதைத்துள்ளார். கடை ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததோடு, கல்லாவில் இருந்த 2000 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில், தனசேகரன், ராகதேவன் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். 

salem rowdy goondas act arreste police commissioner order


விசாரணையில், தனசேகரன் கூட்டாளி தன்ராஜ் என்பவருடன் சேர்ந்து, கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக 2016ல் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை முயற்சி வழக்கில் பிணையில் வெளியே வந்த தனசேகரன், சேலம் நஞ்சம்பட்டியில் கடந்த 2016ம் ஆண்டு சோமசுந்தரம் என்பவரிடம் கத்தி முனையில் 2000 ரூபாய் பறித்ததாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவை தவிர மேலும் சில அடிதடி வழக்குகளும் உள்ளன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


 


இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை ஆணையர் தங்கதுரை, அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் தனசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 


இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனசேகரனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கடந்த 19ம் தேதி காவல்துறையினர் சார்வு செய்தனர். 



 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
NN

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் வானிலை குறித்த பல்வேறு அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 5 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 'தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசும்' என்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

கடத்தப்பட்ட 15 வயது சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Kidnapped 15-year-old girl rescued after 30 days

கீரமங்கலம் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் 15 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் ஜூன் 4 ந் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. பெற்றோர்களும் உறவினர்களும் எங்கு தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல்  நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், கொத்தக்கோட்டை அம்மயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த அரங்குளவன் மகன் காமராஜ் (வயது 24) மற்றும் அவரது நண்பன் கோவிலூர் சம்பாமனை சங்கர் மகன் முருகேசன் (23) ஆகிய இருவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து பழுதான ஒரு மோட்டார் சைக்கிளை புதருக்குள் போட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி கொண்டு சென்றுள்ளனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் சிறுமியை கடத்திய வாலிபர்களின் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் செல்போன் எண்களை ஆய்வு செய்து தலைமறைவாக உள்ள சிறுமி மற்றும் 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். அவர்களது செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் திணறிய போலீசார் அடுத்தடுத்த முயற்சிகள் செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமி கோவையில் இருப்பது பற்றிய தகவல் கிடைத்து காவல் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் கீரமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் கணபதி தலைமையிலான போலீசார் கோவைக்கு சென்று சிறுமி மற்றும் அவரை கடத்தி சென்ற காமராஜ் ஆகியோரை மீட்டு கீரமங்கலம் கொண்டு வந்துள்ளனர்.

15 வயது சிறுமி கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.