
15 வயது சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், டோம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, உணவு விற்பனை செய்யும் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, மசாலா விற்பனையாளரான அசுதோஷ் ராஜ்புத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அசுதோஷ் ராஜ்புத், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், சிறுமிக்கும் அவரது தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார். இதில் கவலையடைந்த தாய், தனது மகளை தேட முயன்றார். இருப்பினும் அசுதோஷ், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வருவதாக தாயிடம் உறுதியளித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறுமி வீடு திரும்பாததால், தாயார் சந்தேகமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இறுதியாக, டோம்பிவ்லியின் கிராமப்புறப் பகுதியில் உள்ள வீட்டில் சிறுமியை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தாயுடன் சண்டை போட்ட சிறுமியை, தன்னுடன் வருமாறு அசுதோஷ் அழைத்துள்ளார். அதன்படி சென்ற சிறுமியை, இரண்டு மாதங்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து அசுதோஷ் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமானபோது, கருக்கலைப்பு செய்வதற்காக முஸ்கன் ஷேக் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்புச் செய்துள்ளார். அதன் பின்னர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக முஸ்கன் ஷேக், அவரது கணவர் மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான அசுதோஷ் ராஜ்புத் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.