
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நாளை அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'மீனவர்கள் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரை பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அடுத்தவரும் ஐந்து தினங்களுக்குச் செல்ல வேண்டாம். என அறிவுறுத்தப்படுகிறது. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்து 48 மணி நேரத்திற்குள் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தற்போது சென்னையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையியிலும், நாகையிலிருந்து 810 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது' என அறிவித்துள்ளார்.