Skip to main content

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

Opening of water for irrigation from Veeranam Lake!

 

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார். இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை வந்தடைந்தது.  கீழணையில் இருந்து வடவாறு மூலம் வீராணம் ஏரியில் தண்ணீர் படிப்படியாக தேக்கி வைக்கப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. இது 1,465 மில்லியன் கனஅடி ஆகும். இதனைத் தொடர்ந்து இன்று திங்கள் கிழமை மாலை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாசனத்திற்காக ராதா மதகு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டார். வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாகவும், பிரதான வாய்க்கால்களில்  வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

 

இதன் மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஏரியைச் சுற்றியுள்ள நத்தமலை, கந்தகுமாரன், உத்தமசோழன், முகையூர் மற்றும் சேதியூர் உள்ளிட்ட 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய பயன்படுவதுடன், நிலத்தடி நீர் உயரும்.

 

வீரணம் ஏரியிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் 72 கனஅடி குடிநீருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக கீழணையிலிருந்து பாசனத்திற்கு வடவாறு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 2,200 கன அடியும், வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் 750 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் ,மூலம் 650 கன அடி, கும்கி மன்னியாறு  மூலம் 150 கனஅடி, மேலராமன் வாய்க்கால் வழியாக 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கடலூர் தஞ்சை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 1,31,903 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு கிருஷ்ணன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் அணைக்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர், ராதா வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் ரங்கநாயகி, கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பாசன சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.