வேலூர் மாவட்டம், குடியாத்தம் டூ பேரணாம்பட்டு சாலையில் டி.டி.மோட்டூர் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 50 லட்ச ரூபாய் செலவில் சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் போட்டுள்ளார் ஒப்பந்ததாரர்.
இந்த சாலை தற்போது பெய்த சாதாரண மழைக்கே தாங்கவில்லையாம். குண்டும், குழியுமாக மாறிவிட்டதாம் இந்த சாலை. இதுப்பற்றி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரான காத்தவராயனிடம் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து தகவல் தந்து பேச அதிகாரிகளை தொடர்பு கொண்டாராம் எம்.எல்.ஏ. ஆனால் யாரும் போனை எடுத்து சரியாக விளக்கம் சொல்லவில்லையாம். இதனால் அதிருப்தியான எம்.எல்.ஏ அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
சாலை போட்டு ஓரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படியானது என்றால் இதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது என்பது உறுதியாகிறது. இதுப்பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர், ஒப்பந்ததாரர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே இந்த மறியல் போராட்டம் என்று பேசி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

எம்.எல்.ஏவே சாலை மறியலில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் காவல்துறை அதிகாதிகள், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்தபின்பே அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.