மின்சாரம் தாக்கி இறந்தவரின் குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி அருகே கட்டுமானப் பணி செய்துகொண்டிருந்த மணிகண்டன் என்பவர், மின்சாரம் தாக்கி கடந்த 2012-ம் ஆண்டு பலியானார். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கட்டிட உரிமையாளர் சிவப்பிரகாசம், கான்ட்ராக்டர் திருமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். அப்போது, மணிகண்டன் இறந்தவுடன், இரு குழந்தைகளை மாமா தியாகராஜனிடம் ஒப்படைத்து விட்டு, மணிகண்டனின் மனைவி சாந்தி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தகவல் நீதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையின்போது, இரு குழந்தைகளுடன் தியாகராஜன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தீர்ப்பளிப்பது மிகவும் சிரமமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. பால்மனம் மாறாத குழந்தைகளை விட்டுவிட்டு, தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. குந்தைகளின் மாமா தியாகராஜன், அவர்களைப் பாதுகாத்து, படிக்க வைத்து வளர்த்து வருகிறார். தந்தையைக்கூட பார்க்காத அந்தக் குழந்தைகளின் ஏக்கம், அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிகிறது. எனவே, இந்தக் குழந்தைகளுக்கு மனுதாரர்கள் இருவரும் தலா ரூ.3 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.
தொழிலாளர் ஆணையர், மணிகண்டன் பலியானது தொடர்பான இழப்பீடு வழக்கில் குழந்தைகளின் சார்பில் அவர்களது மாமா தியாகராஜனை எதிர்மனுதாரராகச் சேர்த்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, உரிய இழப்பீடு தொகையை அறிவிக்க வேண்டும். அந்தத் தொகை இடைக்கால நிவாரண தொகையைவிட (ரூ.6 லட்சத்தை விட) கூடுதலாக இருக்க வேண்டும். தொழிலாளர் ஆணையரிடம் நடைபெறும் விசாரணைக்கு காஞ்சீபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உரிய சட்ட உதவியைத் தரவேண்டும். விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். மனுதாரர்கள் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை பூந்தமல்லி நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.