Skip to main content

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜின் பின்னணி! 

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

Background of Tambaram Police Commissioner Amalraj!

 

தாம்பரம் காவல் ஆணையகத்தின் இரண்டாவது காவல் ஆணையராக கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம். 

 

தாம்பரத்தின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரவி ஓய்வுபெற்றதையடுத்து, போலீஸ் அகாடமியின் இயக்குநராக உள்ள அமல்ராஜை தற்போது தமிழக அரசு நியமித்துள்ளது. கடந்த 1996- ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பேட்ச்-ஐ சேர்ந்த அமல்ராஜ், திருப்பூர் ஏ.எஸ்.பி.யாக தனது காவல் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு, மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர், மதுரை புறநகர், தருமபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை எஸ்.பி.யாக கடந்த 2000- ஆம் ஆண்டு முதல் 2010- ஆம் ஆண்டு வரை அவரது பயணம் தொடர்ந்தது.

 

அதைத் தொடர்ந்து, பதவி உயர்வு பெற்று திருச்சி, ராமநாதபுரம், சேலம் சரகங்களின் டி.ஐ.ஜி.யாகவும், பின்னர், சேலம், திருச்சி, கோவை காவல் ஆணையராகவும், திருச்சி, கோவை மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டார். 

 

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சேர்ந்த இவர், நாகர்கோவில் கார்மல் பள்ளியில் மேல்நிலைப்படிப்பை முடித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த பிறகு மனிதவள மேலாண்மைத் துறையில் எம்.பி.ஏ. பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். 

 

சிறப்பான காவல் பணிக்காக அமல்ராஜ், குடியரசுத்தலைவர் பதக்கம், சிறந்த பொதுச்சேவை மற்றும் சிறந்த காவல் பணியாற்றியதற்காக முதலமைச்சரின் பதக்கங்களைப் பெற்றுள்ளார். காவல் பணி மட்டுமின்றி எழுத்திலும் அமல்ராஜ் சிறந்த புலமை பெற்றவர். ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனர் பொறுப்பையும் கவனிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  


 

சார்ந்த செய்திகள்