Skip to main content

நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
j


அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகின்ற டிச.10 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு.

 

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை காந்திநகர், திருவரங்குளம் ஒன்றியம் தெற்குத் தோப்புப்பட்டி, ஆலடிக்கொல்லை உள்ளிட்ட இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநிலப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு, துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன், செயலாளர் ஏ.பெரியசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.ஜபாருல்லா, செயலாளர் ஆர்.ரெங்கசாமி, பொருளாளர் கே.குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிவாரணப் பணிகளுக்கிடையோ செய்தியாளர்களிடம் அன்பரசு பேசியது:

 

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் நாங்கள் எங்களின் ஒருநாள் ஊதியமான சுமார் நூறு கோடி ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளோம். மேலும், அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்களை சேகரித்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறோம். 

 

கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியமே தொடரும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எங்கள் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால் நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.

 

வரும் 10 தேதி நீதிமன்றத்தில் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் மீண்டும் எங்களது கால வரையற்ற போராட்டத்தைத் தொடருவோம். ஜெயலலிதா அறிவித்த எந்தத் திட்டத்தையும் அவரது மறைவுக்குப் பிறகு இந்த அரசு நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றார். 


            
 

சார்ந்த செய்திகள்