
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டத்தில் 64 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திங்கள் கிழமை (செப். 28) ஆர்ப்பாட்டம் நடத்தின.
மத்திய பாஜக அரசு, அண்மையில் புதிதாக மூன்று வேளாண் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு சில நாள்களுக்கு முன்பு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டம், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது என்றும், விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காது என்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து, புதிய சட்டத்தை கண்டித்து செப். 28- ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து திங்களன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்டத்தில் 64 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் கலைஞர் மாளிகை அருகே மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், ''விவசாயிகள், வணிகர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரான மூன்று சட்டத்திருத்தங்களை சர்வாதிகார போக்குடன், முறையான வாக்கெடுப்பு நடத்தாமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பல்வேறு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சட்டத்திருத்தத்தைக் கண்டித்தும், திரும்பப்பெற வலியுறுத்தியும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.
சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில், திமுக பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ், விசிக, மதிமுக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.