Skip to main content

புதிய முதல்வரால் அதிருப்தி... கட்சித் தாவ தயாராகும் பாஜக தலைவர்கள்?

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

uttarakhand

 

உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இருந்துவந்த நிலையில், உட்கட்சி பூசலால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திராத் சிங் ராவத் உத்தரகண்ட் மாநில முதல்வராக்கப்பட்டார்.

 

முதல்வராக பதவியேற்ற திராத் சிங் ராவத், நான்கே மாதங்களுக்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் நின்று வெல்ல வேண்டும். அதன்படி திராத் சிங் ராவத், செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் உத்தரகண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் உத்தரகண்டில் ஒரு வருடத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்பதால், இராஜினாமா செய்தார். இதனையடுத்து உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி முதல்வராக்கப்பட்டார். இது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

புதிய முதல்வர் என பாஜக மத்திய தலைமையால் புஷ்கர் சிங் தாமி அறிவிக்கப்பட்டதுமே சத்பால் மகாராஜ், ஹரக் சிங் ராவத், யஷ்பால் ஆர்யா ஆகிய மூத்த தலைவர்கள், கட்சியின் சட்டமன்றக் குழு கூட்டத்திலிருந்து வெளியேறினர். பிஷன் சிங் சுபால் என்ற பாஜகவின் மூத்த தலைவர் ஞாயிற்றுக்கிழமை (புஷ்கர் சிங் தாமி பதவியேற்பதற்கு முன்பாக) ஊடகங்களிடம் பேசுகையில், "புஷ்கர் சிங் தாமி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் முதல்வராவதற்குப் பதவிப் பிரமாணம் நடக்க வேண்டும்" என தெரிவித்தார். இவையெல்லாம் மூத்த தலைவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே அமைந்தன.

 

மூத்த தலைவர்களின் அதிருப்தியைத் தொடர்ந்து பாஜக மத்திய தலைமை, அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளது. சத்பால் மகாராஜ், ஹரக் சிங் ராவத், யஷ்பால் ஆர்யா ஆகியோர் புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிக்க முடிவுசெய்ததாகவும், பாஜக மத்திய தலைமையின் சமாதான முயற்சியாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக அதிருப்தியாளர்களிடம் பேசியதாலுமே அவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதாகவும் பாஜக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

அதிருப்தியடைந்த மூத்த தலைவர்களில் முக்கியமானவர்களான சத்பால் மகாராஜ், ஹரக் சிங் ராவத், யஷ்பால் ஆர்யா ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக இருப்பவர்கள். அவர்கள் புதிய அரசிலும் அமைச்சர்களாக தொடர்கிறார்கள். இருப்பினும் அதிருப்தியில் உள்ள தலைவர்கள், கிட்டத்தட்ட ஏழு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், காங்கிரஸிற்குத் தாவ வாய்ப்புள்ளதாகவும் மாநில பாஜக வட்டாரங்களே தெரிவிக்கின்றன.    

 

 

சார்ந்த செய்திகள்