
நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், நீர் நிலைகளில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறையால் பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழும் ஒரு கிராம பெண்கள், பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து கிணற்றுக்குள் ஆபத்தான முறையில் இறங்கி தண்ணீர் எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் போரிச்சிபாரி என்ற கிராமம் உள்ளது. 4,000 பேர் வாழும் இந்த கிராமத்தில், இந்த ஆண்டு கடுமையாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் உள்ள மூன்று கிணறுகளும் முற்றிலும் வறண்டு போயுள்ளதால், இந்த கிராம மக்கள் அருகில் உள்ள கும்பாலே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த கிராமத்தில் வாழும் பெண்கள், சுமார் 2 கி.மீ வரை நடந்து சென்று அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்கின்றனர்.
கிணற்றில் இருக்கும் தண்ணீர் கூட அடியில் இருப்பதாலும், பானை கூட அதை அடைய முடியாததாலும், கிணற்றுக்குள் கயிற்றை போட்டு அதை வைத்து ஆபத்தான முறையில் இறங்கி பெண்கள் தண்ணீர் எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையிலும், மாலையிலும் சுமார் 2 மணி நேரம் நடப்பதால், நாளின் பெரும் பகுதியை தண்ணீர் எடுக்க மட்டுமே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக கிராமத்தில் வாழும் பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த தண்ணீர் பிரச்சனை காரணமாக, மற்ற கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் தங்கள் மகள்களை, இந்த கிராமத்தில் திருமணம் செய்து வைக்க தயங்குவதாகக் கூறப்படுகிறது.