
திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது கணவரை தனது ஆண் நண்பரின் உதவியுடன் மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டம், பட்கெளலி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் சந்தேகத்திற்கு இடமான பை ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட விவசாயி ஒருவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பையை போலீசார் திறந்து பார்த்துள்ளனர். அதில், ஒரு ஆணின் உடல் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த உடல் குறித்து விசாரித்தனர்.
பைக்குள் கிடைத்த பாஸ்போர்ட்டின் அடிப்படையில் இறந்து போன நபர் 37 வயதான நெளஷாத் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து அவரின் வீட்டைக் கண்டுபிடித்து சோதனை நடத்திய போது, மற்றொரு டிராலி பையில் ரத்தக் கறைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார், இறந்து போன நெளஷாத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
துபாயில் வேலை பார்க்கும் நெளஷாத், படெளலி கிராமத்தில் தனது தந்தை, மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், நெளஷாத்தின் மனைவிக்கும், அவரது மருமகனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 10 நாள்களுக்கு முன்பு துபாயில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த நெளஷாத், தனது உறவுக்கு இடையூறாக இருப்பதால் அவரை அவரது மனைவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று, அந்தப் பெண் தனது கணவரின் மருமகன் மற்றும் மற்றொரு நண்பரின் உதவியுடன் அவரைக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், கணவரின் உடலை அவர் கொண்டு வந்த டிராலி பையிலேயே அடைத்து காரில் ஏற்றி சுமார் 60 கி.மீ தூரம் வரை பயணம் செய்து ஒரு வயலில் போட்டுள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, நெளஷாத்தின் மனைவியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் நெளஷாத்தின் மருமகனையும், அவரது நண்பரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். படௌலிக்கும் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கும் இடையிலான பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.