Skip to main content

“இதில் என்ன தவறு இருக்கின்றது?” - எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published on 22/04/2025 | Edited on 22/04/2025

 

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மதுவிலக்குத் துறை தொடர்பாக இன்று (22.04.2025) விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன முறைகேடு புகார்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி பேச சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் “டாஸ்மாக் நிறுவன முறைகேடு புகார்கள் குறித்துப் பேசுவதற்குப் பயமா?” என அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “யாருக்கும் பயந்தவர்கள் இல்லை” எனச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இருப்பினும் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் அவையில் சிறிது நேரம் அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யும் மதுபான ஆலைகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் பத்திரிக்கை ஊடகங்களில் செய்தி வெளியிட்டனர். இது குறித்து முதல்வரோ, துறையின் அமைச்சரோ எவ்வித பதிலறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இதனைத் தான அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நான் வாய்ப்பு கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கின்றது?. டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இதற்கு அரசு சார்பில் முழு விளக்கம் தரப்படவில்லை. இது தொடர்பாக இன்று மானியக்கோரிக்கை வந்தது. அப்போது இது தொடர்பாகப் பேச அனுமதி மறுக்கப்பட்டது” எனப் பேசினார். 

அதே சமயம் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், ஏப்ரல் 25ஆம் தேதி (25.04.2025) வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணிக்கு, அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்