Skip to main content

“பழங்குடி பெண் திரௌபதி முர்மு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர்” - மோடி புகழாரம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

"Tribal woman Draupadi Murmu is leader of largest democracy" - Modi

 

இந்த ஆண்டு ஜி-20 நாடுகள் அமைப்புக்கு  இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த மாநாடு டெல்லி தலைநகரில் நடக்க உள்ளது. இதையொட்டி, ஜி-20 அமைப்பின் சார்பில் பல்வேறு தலைப்புகள் அடங்கிய கூட்டங்கள் இந்தியாவில் உள்ள பல  நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், பெண்கள் அதிகாரம் குறித்த ஜி-20 அமைச்சர்கள் மாநாடு, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று காணொளி வாயிலாகப் பேசினார்.

 

அப்போது அவர், “கல்வி, பொருளாதார ரீதியில் பெண்கள் முன்னேற வேண்டும். நாகரிகமான சமுதாயத்தில் பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். பெண்கள் சாதனை புரிவதற்கான களத்தை நாம் உருவாக்க வேண்டும். அந்த வகையில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களின் பொருளாதார மேம்பாடு வளர்ச்சியை இந்தியா ஊக்குவித்து வருகிறது. அவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள கிராமப்புற அமைப்புகளில் 10 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில், 46 சதவீதம் பெண்கள்தான் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள செவிலியர்கள் மற்றும் பேறுகாலப் பணியாளர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள்தான் இருக்கின்றனர்.

 

அதன்படி இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். பழங்குடி குடும்பப் பின்னணியில் இருந்து வந்த திரெளபதி முர்மு, தற்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருக்கிறார். அவர், உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு படையின் தலைவராகப் பணியாற்றுகிறார். இன்று ஆண்களை விட பெண்கள் தான் உயர் கல்வியில் அதிகமாகச் சேருகின்றனர். இந்தியாவில் சிவில் விமானப் பயணத்தில் பெண் விமானிகள் தான் அதிக சதவீதத்தில் உள்ளனர். மேலும் , இந்திய விமானப்படையில் இருக்கும் பெண்கள், போர் விமானங்களை இயக்கி வருகிறார்கள். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்ற பயனாளர்களில் 70 சதவீதம் பெண்கள் தான் இருக்கின்றனர். அதே போல் ஸ்டாண்ட் ஆஃப் இந்தியா திட்டத்தின் மூலம் 80 சதவீதம் பெண்கள் தான் பயனாளிகளாக இருக்கின்றனர். பெண்கள் செழித்தால் நாடு செழிக்கும்.” என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்