Skip to main content

“ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Mallikarjuna Kharge said This is the last chance to save democracy

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 7 கட்டங்களாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “2024 மக்களவைத் தேர்தல் இந்தியாவிற்கு நியாயத்தின் கதவை திறக்கும். ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக ‘இந்திய மக்களாகிய நாங்கள்’ ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்