
இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி கன்னடம் பேசாததால் பைக் ஓட்டுநர் ஒருவர், அவரை தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘இந்தியில் மட்டும் தான் பேச மாட்டேன் கன்னடம் பேச மாட்டேன்’ என வாடிக்கையாளரிடம் எஸ்.பி.ஐ வங்கியின் பெண் மேலாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், அனேகல் தாலுகாவின் சூர்யா நகரில் எஸ்.பி.ஐ வங்கியின் கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக பொறுப்பு வகித்து வரும் பெண் ஒருவர், வாடிக்கையாளரிடம் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு வாடிக்கையாளர், ‘இது கர்நாடகா’ என்கிறார். அதற்கு மேலாளர், ‘நீங்கள் எனக்கு வேலை கொடுக்கவில்லை’ எனச் சொல்ல, வாடிக்கையாளர் மீண்டும், ‘இது கர்நாடகா மேடம்’ என்கிறார். அதற்கு மேலாளர், ‘அதனால் என்ன, இது இந்தியா’ எனச் சொல்ல வாடிக்கையாளர் மீண்டும், ‘கன்னடம் தான் முதலில் பேச வேண்டும்’ என்கிறார். அதற்கு மேலாளர், ‘உங்களுக்காக நான் கன்னடம் பேச முடியாது, இந்தியில் தான் பேசுவேன்’ என்கிறார். வாடிக்கையாளர் மேலாளரிடம், ‘மேடம் இது கர்நாடகா, நீங்க கன்னடம் பேச வேண்டும். இது தலைவரைப் பற்றிய விஷயம் இல்லை, குறிப்பிட்ட மாநிலத்தில் நீங்க அந்தந்த மொழியில பேசணு வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதி இருக்கிறது’ எனச் சொல்கிறார். கடைசியாக, ‘நான் கன்னடத்தில் பேசவே மாட்டேன்’ என்கிறார் மேலாளர். இப்படியாக இவர்களுக்குள் வாக்குவாதம் நீடித்து கொண்டே போகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கர்நாடகாவில், கன்னடம் பேசாத வங்கி மேலாளருக்கு எதிராக கண்டன குரல் எழுந்து வருகிறது. இதனால், கன்னடம் பேசாத மேலாளரை உடனடியாக பணி இடமாற்றம் செய்து எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில் வங்கி மேலாளருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து, குடிமக்களை அலட்சியப்படுத்திய எஸ்பிஐ கிளை மேலாளரின் நடத்தை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதிகாரியை இடமாற்றம் செய்ததில் எஸ்பிஐயின் விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த விவகாரம் இப்போது முடிக்கப்பட்டதாகக் கருதப்படலாம். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் மற்றும் மாநில மொழியில் பேச அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாச்சார மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியை கட்டாயமாக்குமாறு நான் மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதி சேவைகள் துறையை கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும்’ எனப் பதிவிட்டுள்ளார்.