
25 சதீவித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு. தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது என்கிற காரணத்தை முன்னிறுத்தி RTI-படி 25 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இதில் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய ரூபாய் 2000 கோடிக்கு மேலான நிதி பங்கீட்டை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 7 லட்சம் மாணவர்களுக்கு மேலாக கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை இருக்கிறது.
இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணைய தளத்தை முடக்கி வைத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிதியினை வழங்கி RTE முழுமையாக மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்களும் 75 சதவிகிதம் மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்கும் நிலையில் அரசு நிதி தாமதமாவதை காரணமாக காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஒன்றிய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தையே முடமாக்கும் வகையில் இச்சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி வாய்ப்பை மறுக்கும் வகையில் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசிடமிருந்து நிதியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் ளும் அதேநேரத்தில், தனியார் கல்வி நிறுவனங்களில் RTE சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய சும்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.