
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் நேற்று (21.05.2025) நண்பகல் 01.15 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் (நேற்று) காலை 08.30 மணி அளவில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அதற்கடுத்த 36 மணி நேரத்தில் வலுவடையக் கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. மேலும், அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.