
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகவும், அதேசமயம் வயது முதிர்வு காரணமாகவும் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் போப் பிரான்சிஸ் கடந்த 21.04.2025 அன்று காலமானார்.
இதனையடுத்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சிஸ்டின் தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் பிரிவோஸ்ட், வாடிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் நேற்று (18-05-25) பதவியேற்றுக் கொண்டார். போப் 14ஆம் ராபர்ட் பிரிவோஸ்டுக்கு, போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. பதவியேற்ற பின், போரால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் காசா, உக்ரைன் மக்களுக்கு போப் 14ஆம் ராபர்ட் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்த பதவியேற்பு விழாவில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பலர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் பங்கேற்றார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்கும் நிகழ்வால், வாடிகன் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அமெரிக்காவின் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.