Skip to main content

இந்தியாவில் வருகிறது ரிமோட் வோட்டிங்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021
SUNIL ARORA

 

 

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்.பிக்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்று, நேற்று நடைபெற்றது. தனியார் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த விழாவில் கலந்துகொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சிறப்பாக செயல்பட்ட எம்.பிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவில் ரிமோட் வோட்டிங் முறை குறித்த திட்டம் தயாராகி வருவதாக தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக அவர், இந்திய தேர்தல் ஆணையம் இந்தாண்டின் தொடக்கத்தில் ஐ.ஐ.டி சென்னை மற்றும்  இதர ஐ.ஐ.டிக்கள், சிறந்த கல்விநிறுவனங்களை சேர்ந்த தொழிற்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனையுடன் ரிமோட் வோட்டிங் தொடர்பான ஆய்வு திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த முறைக்கு வடிவம் கொடுக்க ஒரு குழு கடுமையாக உழைத்து வருகிறது. ரிமோட் வோட்டிங் 2024 மக்களவைத் தேர்தலில் பயன்பாட்டிற்கு வரலாம். இந்த திட்டத்திற்கான தொடக்க கட்ட சோதனை, இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் நடைபெறும் என கூறியுள்ளார். 

 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதை வரவேற்றுள்ள சுனில் அரோரா, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் திட்டம், அடுத்த ஓராண்டிற்குள் அமல்படுத்தப்படலாம் என தெரிவித்தார். இந்தநிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் இணை தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ரிமோட் வோட்டிங் என்பது வீட்டிலிருந்தே இணையம் மூலமாக வாக்களிப்பது இல்லையென்றும், தொலைதூர நகரங்களில் இருப்பவர்கள், அந்த நகரங்களில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களில் சென்று வாக்குகளை செலுத்தவேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதம் சரிவு; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Radhakrishnan explained decline in voter turnout

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்.

அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை  நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. மேலும் வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2019 மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.