Skip to main content

அசிங்கப்பட்ட ஆளுநர்கள்..

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
Banwarilal

 

ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதுக்கு என்று அண்ணா கேள்வி எழுப்பினார்.

 

ஆனாலும், மாநில அரசுகளை மிரட்டுவதற்காக மத்திய அரசுக்கு உதவும் ஏஜெண்டுகளாக நியமிக்கப்படும் அந்தப் பதவி இப்போதும் நீடிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்களுக்கு அனுசரணையான ஆட்களை ஜனாதிபதிகளாகவும், கவர்னர்களாவும் நியமித்துக் கொள்வதே இன்றுவரை வாடிக்கையாக தொடர்கிறது.

 

ஜனாதிபதிகளும், கவர்னர்களும் ஆளும் அரசுகளின் எண்ணத்தை பிரதிபலிக்கிறவர்களாக மட்டுமே செயல்படும் வகையில் அரசியல் சட்டம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. ஆனால், ஆளும் அரசுகள் வழிதவறும்போது தட்டிக்கேட்ட ஜனாதிபதியாக கே.ஆர்.நாராயணன் மட்டுமே இருந்திருக்கிறார்.

 

கவர்னர்கள் என்பவர் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பவராகவும், பதவிப்பிரமாணங்களை செய்துவைப்பவராகவும், ஆண்டுக்கு ஒருமுறை சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி எழுதிக்கொடுக்கும் அரசின் திட்டங்களை வாசிப்பவராகவும், அரசு பரிந்துரைக்கும் ஆட்களை நியமிப்பவராகவும் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.

 

மாநில அரசுகளை தங்கள் விருப்பத்திற்கு கவிழ்ப்பதற்காக கவர்னர்களை மத்திய அரசுகள் பயன்படுத்தி இருக்கின்றன. தமிழகத்தில் இரண்டு முறை திமுக அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. 1976 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசை கலைக்க தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கையெழுத்துப் போட்டவர் கே.கே.ஷா. 1991 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக அரசை கலைக்க கையெழுத்துப் போட மறுத்தவர் பர்னாலா.

 

Prabhudas

பிரபுதாஸ் பட்வாரி

தமிழக ஆளுநர்களாக இருந்தவர்களில் கடுமையான சர்ச்சைகளில் சிக்கியவர்களும் இருக்கிறார்கள். 1977 ஆம் ஆண்டு ஜனதாக்கட்சி மத்தியில் ஆளும் கட்சியாக வந்தபோது தமிழகத்திற்கு பிரபுதாஸ் பட்வாரி என்ற வயதான கவர்னரை நியமித்தார்கள். அவர் ஆளுநர் மாளிகையை சைவக் கூடமாக மாற்றினார். அதுமட்டுமின்றி பிரதமர் மொரார்ஜியை பின்பற்றி தானும் தினமும் ஒரு டம்ளர் சிறுநீர் குடிப்பதாக பேட்டி கொடுத்தார். இதையடுத்து, அவர் கேலிக்கு ஆளானார். நாளிதழ்களிலும் அரசியல் மேடைகளிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

 

தமிழ்நாட்டில் நெருக்கடிநிலைக்காலத்தில் மட்டுமே ஆளுநர் ஆட்சி ஆறுமாதங்களுக்கு மேல் நீடித்திருந்தது. ஆனால், 1987 ஆம் ஆண்டு எம்ஜியார் இறந்தவுடன் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதையடுத்து, காங்கிரஸின் நலனுக்காக ஆளுநர் ஆட்சி ஒரு ஆண்டுவரை நீடிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஒரு ஆண்டும் ஆளுநர் மாளிகையே தலைமைச் செயலகமாக செயல்பட்டது. ஆளுநரின் உதவியாளர்களே நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார்கள். காங்கிரஸார் வைத்ததே சட்டமாக இருந்தது.

 

ஜெயலலிதா ஆட்சியில் 1993ல் கவர்னராக நியமிக்கப்பட்டவர் சென்னாரெட்டி. இவர் பதவிக்கு வந்தபிறகு அன்றைய ஜெயலலிதாவின் ஊழல்கள் குறித்து வழக்குத் தொடர அனுமதி கோரினார் சுப்பிரமணியன் சாமி. அந்தக் கோரிக்கையில் நியாயம் இருப்பதை அறிந்த சென்னாரெட்டி ஜெயலலிதா மீது ஊழல் வழக்குத் தொடர அனுமதி கொடுக்க முடிவுசெய்தார்.

 

இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. 1994 ஆம் ஆண்டு அரசு காலண்டர் தயாராகி அதை ஜெயலலிதாவிடம் கொண்டுபோய் காட்டினார்கள். அதில் சென்னாரெட்டி படம் இருந்தது. அதைப் பார்த்த ஜெயலலிதா காலண்டரை தூக்கி வீசினார்.

 

ChennaReddy

 

இதையடுத்து, சென்னாரெட்டி படம் இல்லாமல் புதிய காலண்டர் தாயரித்து வினியோகித்தனர். பின்னர், சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, ஆளுனருடன் ஏன் கலந்து பேசி முடிவெடுப்பதில்லை என்பதற்கு விளக்கம் அளித்தார். அப்போது, ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் முறைதவறி நடக்கமுயன்றார் என்று பகிரங்கமாக கூறினார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதற்குப் பிறகு வந்த கவர்னர்கள் யாரும் ஆளுங்கட்சியோடு மோதல் போக்கை கையாளவில்லை. ஆனால், பன்வாரிலால் தானே ஒரு முதல்வரைப்போல செயல்படத் தொடங்கி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கினார்.

 

ஆளுநரின் இந்த அடாவடியான போக்கை, தமிழக முதல்வரோ அமைச்சர்களோ கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து ஆளுநர் தன்னை சூப்பர் முதல்வர் ரேஞ்ச்சுக்கு மாற்றிக் கொண்டார்.

 

ஆய்வு என்ற பேரில் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள் பல்கலைக்கழகங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்மூலம் தனது அதிகாரத்தை பறைசாற்றத் தொடங்கினார். முதல்வரும் அமைச்சர்களும் இதை மறைமுகமாக ஆதரித்ததால் அதிகாரிகளும் ஆளுநருக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர்.

 

இதைப் பயன்படுத்தியே ஆளுநர் சில அத்துமீறல்களில் துணிச்சலாக ஈடுபட்டிருக்கிறார். தூய்மை இந்தியா பணிகளை ஆய்வு செய்யப்போவதாக கூறிய அவர் கடலூரில் ஒரு பெண் குளிக்கும் இடத்திற்குள் எட்டிப்பார்த்து முதல் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

அப்போதுமுதல், அவருடைய ஆய்வுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதைக்கூட அவர் கண்டுகொள்ளாமல் தனது பயணத்தை தொடர்ந்து நடத்தினார்.

 

இந்நிலையில்தான், தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு தனது நோக்கப்படி வெளிமாநில ஆட்களை துணைவேந்தர்களாக நியமித்தார்.

 

இதுகுறித்து கேட்டபோது, வேந்தர் என்ற தகுதியில் அதற்குரிய அதிகாரத்தைத்தான் பயன்படுத்துவதாக அவர் பதில் அளித்தார். ஆனால், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு சூரப்பாவை நியமிக்க 35 கோடி ரூபாய் பணம் பெற்றதாக தகவல்கள் கசிந்தன. அதுமட்டுமின்றி, கர்நாடகா மக்களை பாஜகவுக்கு ஆதரவாக கவர்வதற்காகவே சூரப்பா நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவி அரசியல் சட்டம் கொடுத்தது அல்ல என்றும், சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களுக்காக தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய சட்டதிட்டங்களில்தான்,  பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்தச் சட்டவிதியை மாநில அரசு திருத்த முடியும் என்கிறார்கள். அப்படித் திருத்தினால் ஆளுநரின் வேந்தர் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்றும் சொல்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்காக கல்லூரி மாணவிகளை வழிக்குக் கொண்டுவர முயன்ற பேராசிரியை நிர்மலாதேவியின் ஆடியோவை நக்கீரன் இதழ் முதன்முதலாக வெளிக்கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதன்பிறகு ஏப்ரல் 16 ஆம் தேதிதான் தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி அந்த ஆடியோவில் மாணவிகளிடம் பேசுவதை வைத்துப் பார்க்கும்போது ஆளுநருக்காகவும் வேறு இரண்டு விவிஐபிக்களுக்காகவும் பேசுகிறார் என்பது புரிகிறது.

 

Journo

 

ஆடியோ வெளியானவுடன் நிர்மலா தேவியை போலீஸ் கைதுசெய்கிறது. உடனே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதுபோல அவசர அவசரமாக ஆளுநரே செய்தியாளர்களை சந்திக்கிறார். ஆளுநரின் பதற்றமே அவர் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அந்த சந்திப்பிற்கு வந்த பெண் செய்தியாளரின் கன்னத்தை தட்டி மேலும் ஒரு சிக்கலில் சிக்கினார். அந்தச் செய்தியாளர் ஆளுநரின் செயலை அருவெறுப்பாக உணர்ந்ததாக பதிவிட்டார். இதையடுத்து ஆளுநர் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டது.

 

ஆளுநர் இனிமேல் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் நீளமான மைக்குகளுடன் பெண் செய்தியாளர்கள் போவார்கள் என்கிற அர்த்தத்தில் தி ஹிண்டு கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டு ஆளுநரை மிகமோசமாக சித்தரித்திருந்தது.

 

The hindu

 

இத்தனை அசிங்கங்களுக்குப் பிறகும் ஆளுநர் இன்னமும் பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வியைத்தான் மக்கள் கேட்கிறார்கள்.

 

ஆனால், அரசியல் சட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற இந்த கவர்னர் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.