உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாது என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு 15 நாளில் வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நாங்குநேரியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசியதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டது.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவில் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கான இடங்களை பெறுவது சம்மந்தமாக அதிமுகவிடம் பேச ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சென்னை, மதுரை ஆகிய இரண்டு மாநகராட்சிகளை கேட்டு அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறது.
இதேபோல் பாமகவும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஏற்கனவே தொடங்கியதோடு, தாங்கள் போட்டியிடும் இடங்களை கண்டறிந்து எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறது. அதில் சென்னை, வேலூர், சேலம் ஆகிய மூன்று மாநகராட்சிகளை பாமகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. பாஜகவும் உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த இடங்களில் தாங்கள் போட்டியிட விரும்புகிறோம் என்று ஒரு பட்டியலை கொடுத்திருக்கிறது. அதில் சென்னை, திருப்பூர், நாகர்கோவில், கோவை, ஓசூர் ஆகிய 5 மாநகராட்சிகளை கேட்டிருக்கிறார்கள்.
பாஜக, பாமக, தேமுதிக கொடுத்த லிஸ்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக சீனியர்களோ கூட்டணிக் கட்சிகள் கேட்ட எண்ணிக்கையும் கொடுக்க வேண்டாம். அவர்கள் கேட்ட இடங்களையும் கொடுக்க வேண்டாம். சற்று பொறுமையாக இந்த விசயத்தில் கையாளுவோம். நாடாளுமன்றத் தேர்தல் மாதிரி இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வத்திடம் சொல்லி வருகிறார்களாம்.
இந்தநிலையில்தான் கடந்த 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினர். உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இருக்கக்கூடாது என்றும் கூட்டணிக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும், அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர்.