Skip to main content

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை! சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019
ர்


ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், அந்த ஒப்பந்தம் செல்லும் என்றும், ஒப்பந்தத்திற்கு  தடை விதிக்கக்கோரிய மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.  

 

கடந்த 2016ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.  இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் தலையீடு இருந்தது என்றும், முறைகேடு நடந்துள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்தரபினரால் குற்றம்சாட்டப்பட்டது.  ஆகவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் எழுந்தது.

 

இதையடுத்து, ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கில் விசாரணையை அடுத்து கடந்த 2018ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 14ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில்,  ‘ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்த நடைமுறை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் அவை அனைத்தும் சரியான ஒன்றாகத்தான் இருக்கிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை.  அதனால், இந்த விவகாரத்தில் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்க முடியாது’என்று கூறப்பட்டது.  இந்த தீர்ப்பினை எதிர்த்து, ‘மத்திய அரசு ரபேல் போர் விமான விவகாரத்தில் முற்றிலும் தவறான தகவலை அளித்துள்ளது. ஆகவே, இந்த வழக்கை மறு சீராய்வு செய்ய வேண்டும்’’என்று கோரி, கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்கா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.  

 

இந்த மனு மீதான விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வாசித்தனர்.  அத்தீர்ப்பில், மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.