சிவகங்கையை அடுத்த படமாத்தூர் சித்தாலங்குடியில் வேங்கைப்புலி வேட்டைக்கு நேர்த்திக்கடன் செய்த 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 160 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர்.
சிவகங்கையை அடுத்த படமாத்தூர் சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் உள்ளது. இதில் வணங்கப்படுகிற கடவுள் சிவகங்கையை ஆண்ட முதல் ஜமீன் கௌரி வல்லப உடையண ராஜா (1801- 1828) அல்லது அவரது மூதாதையராக இருக்கலாம். குதிரை மேல் அமர்ந்த வீரனைப் போன்ற அமைப்புடன் அணிகலன்கள் அணிந்து தலைப்பாகையுடன் சிலை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இதே சிலை அமைப்புடன் சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியிலும் மகாராஜா கோவில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. படமாத்தூரில் இருக்கும் கௌரி வல்லவரை சிவகங்கை அரண்மனையினர் குல சாமியாக வணங்குவதோடு அப்பகுதி மக்களும் தங்களது காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
கோயில் திருச்சுற்று மதிலில் கல்வெட்டு:
படமாத்தூர் கௌரி வல்லவர் திருக்கோவிலில் சுற்றுமதில் வடக்குப் பகுதியில் சுவரின் அடியில் ஒன்பது வரிகளைக் கொண்ட ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.
கல்வெட்டுச் செய்தி:
1861- ஆம் ஆண்டு துன்மதி வருஷம் வைகாசி மாதம் 26- ஆம் நாள் மகாராஜா சத்ரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டைக்குச் செல்லும்போது படமாத்தூரில் இருக்கும் இஷ்ட குல தெய்வமான வல்லவ சாமியிடம் செய்து கொண்ட பிரார்த்தனையின்படி புலியைச் சுட்டுக் குத்தினதுனாலே இந்த திருமதிலைக் கட்டினது என எழுதப் பெற்றுள்ளது.
மகாராஜா போத குருசாமி:
கல்வெட்டில் உள்ள காலத்தைக்கொண்டு இவர் சிவகங்கையின் ஐந்தாவது ஜமீனான இரண்டாம் போத குருசாமி மகாராஜா (1848-1865) என உறுதிசெய்ய முடிகிறது. மேலும் 160 ஆண்டுகள் பழமையான சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்த கல்வி வள்ளலும் இவரே ஆவார். இவரது சிலை சிவகங்கை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ளது சிறப்பு.
செவ்வேங்கை:
சிவகங்கையின் பழமையான பெயர் செவ்வேங்கை என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், சிவந்த மண்ணில் வேங்கை மரம் நிறைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பர். சிவந்த வேங்கைப்புலி நிறைந்த பகுதியாக இருந்து செவ்வேங்கை பகுதி பின்னாளில் சிவகங்கை பகுதியாகவும் மாறியிருக்கலாம்.
புலி நிறைந்த காட்டுப் பகுதி:
சிவகங்கை வரலாற்றில் சிவகங்கையின் முதல் மன்னர் சசிவர்ணத்தேவர் தஞ்சை செல்லும்போது புலியை அடக்கியதாகவும், பின்னாளில் மருது சகோதரர்கள் புலியை அடக்கியதாகவும் செய்தி உண்டு. மேலும், மற்றொரு மன்னர் புலியை வீழ்த்தி இருப்பதை இக்கல்வெட்டு வழி அறிய முடிகிறது.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தவரான போதகுரு சாமி மகாராஜாவின் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.