Skip to main content

பாலியல் புகார்களை விசாரிப்பவர்கள் மீதே சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டு! -குழந்தைகள் நலக்குழும சர்ச்சை!

Published on 17/10/2020 | Edited on 22/10/2020

 

Girls home incident - Child Welfare Group Controversy!

 

 

குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிராக மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ தீங்கு விளைவித்தால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதோடு அவர்களை பாதுகாக்கும் பொறுப்புள்ள சி.டபுள்யூ.சி எனப்படும் குழந்தைகள் நலக் குழுமத்தின் அதிகாரிகள் மீதே, பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் அம்பலமானதோடு தமிழகம் முழுக்க உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தின் நிலமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

 

அடிக்கடி சிறுமியை சந்தித்த ஆண் உறுப்பினர்!

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 16 வயது சிறுமி தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

 

தனது அம்மா வானதி (சிறுமியின் நலன் கருதி அம்மாவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) தன்னை இரண்டாவது கணவனுக்கே திருமணம் செய்துவைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று சைல்டுலைன் என்கிற என்.ஜி.ஓ தொலைபேசி எண் 1098 மூலம் பகீர் புகாரை கொடுத்தார். இதனால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ (The Protection of Children from Sexual Offences (POCSO) Act) சட்டத்தின்படி அச்சிறுமியின் இரண்டாவது தந்தை அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

 

சிறுமி  தீபிகாவை பாதுகாப்பாக தங்க வைக்க காஞ்சிபுரம் மாவட்ட சி.டபுள்யூ.சி எனப்படும் குழந்தைகள் நலக்குழுமத்தலைவர் ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்தார்கள். அவரது, வாய்மொழி உத்தரவின்மூலம் தாம்பரம் சானட்டோரியம் அரசு சேவை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டாள் சிறுமி தீபிகா. அதற்குப்பிறகு, சி.டபுள்யூ.சி கமிட்டியின் முன் கொண்டுவந்து விசாரித்து பிறகு அச்சிறுமி, அரசு இல்லத்தில் தங்குவதற்கான ஆர்டரை வழங்கவேண்டும். ஒருவேளை, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அச்சிறுமி கமிட்டிக்கு வருவதற்கு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால்  பெண் உறுப்பினருடன் சென்று அச்சிறுமியிடம் விசாரித்து பிறகு,  சிறுமி தங்குவதற்கான ஆர்டரை இல்லத்தினரை வரவழைத்து கொடுக்கலாம். ஆனால், காஞ்சிபுரம் சி.டபுள்.சி உறுப்பினர் தாமோதரன் என்பவர் பெண் உறுப்பினரை அழைத்துச்செல்லாமலேயே தனியாக சென்று சிறுமியை சந்தித்து பேசியதுடன்  சி.டபுள்யூ.சி சீல், ஃபார்ம் எல்லாம் விதிக்குப்புறம்பாக தனது பையிலேயே வைத்துக்கொண்டு ஆர்டரையும் அவரே நேரில் சென்று வழங்கியது விதிக்கு புறம்பானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அடிக்கடி சிறுமியை சந்திக்க சென்றதோடு, தன்னிடம் தவறாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் சிறுமி தீபிகா.

 


சிறுமியை பெற்றோர் மற்றும் சமூகத்தின் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கத்தான் அரசாங்கத்தின் பெற்றோர்களான சி.டபுள்யூ.சியிடம் ஒப்படைக்கிறது போலீஸ். ஆனால், வேலியே பயிரை மேயலாமா என்ற அதிர்ச்சிக் கேள்வி எழும்பியிருக்கிறது. இதற்கிடையே, இவ்வில்லத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை இச்சிறுமி வெளியில் கூறிவிட்டதாலும் சி.டபுள்யூ.சி உறுப்பினர் தாமோதரன் குறித்து குற்றஞ்சாட்டியதாலும் இல்லத்தின் கண்காணிப்பாளர் மாசிலாமணி, பாதுகாவலர் அலமேலு மற்றும் சி.டபுள்யூ.சி உறுப்பினர்கள் கொடுத்த டார்ச்சரால் சிறுமி தீபிகா இல்லத்தை விட்டு வெளியேறி மூன்று மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டார். மேலும், அடிக்கடி கைகளை கீறிக்கொண்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 

வாட்ஸ்-அப் குரூப்பில் சிறுமியின் ஆடியோ!

சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைகள் தொடர்பான வாக்குமூலங்களின் வீடியோக்களையோ, ஆடியோக்களையோ, புகைப்படங்களையோ யாருமே பொதுவெளியில் பகிரக்கூடாது. அப்படியிருக்க, இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சி.டபுள்யூ.சி தமிழ்நாடு’ என்ற வாட்ஸ் அப் குரூப்பிலேயே, சிறுமி பாலியல் ரீதியான புகாருக்கு வாக்குமூலம் கொடுத்த ஆடியோவை காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திலுள்ள உறுப்பினர் பகிர்ந்தது தமிழ்நாடு முழுக்க இருக்கிற 32 மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

 

காரணம், ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் தாமோதரன் மீது சிறுமி தீபிகா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதிலிருந்து, தாமோதரனை தப்பிக்க வைக்கவே இந்த ஆடியோ வாக்குமூலத்தை சிறுமி தீபிகாவிடம் வாங்கியிருக்கிறார்கள் சக்திவேல் மற்றும் நிர்மலா உள்ளிட்ட சக உறுப்பினர்கள். மேலும், அந்த ஆடியோவை சக்திவேல் என்கிற உறுப்பினர் பொது வெளியில் பகிர்ந்தது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

டிவிட்டரில் ஷேர் ஆன ஆபாச வீடியோக்கள்!

சி.டபுள்யூ.சி உறுப்பினர் தாமோதரனின் டிவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களும்  வீடியோக்களும் ஷேர் ஆகியுள்ளன.  கமேண்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பாலியல் புகார் மற்றும் இதரப் புகார்கள் குறித்து விசாரிக்கும்  அரசாங்க உறுப்பினரின்  டிவிட்டர் பக்கம் இப்படியிருக்கலாமா? என்று கேள்வி எழுப்புகிறவர்கள்  மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு விதிமீறல்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

குற்றச்சாட்டு-1

‘சைல்டு லைன்’ போலவே மற்றொரு அமைப்பான  ‘சைல்டு ஹெல்ப் டெஸ்க்’ அமைப்பு  மூலம் மீட்கப்பட்ட 14 வயது நாகலாந்து சிறுமியையும் இப்படித்தான் பெண் உறுப்பினரைக்கொண்டு விசாரிக்காமலேயே 2020 மார்ச் 18 ந் தேதி தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கவைத்து சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவிட்டார்கள். இதனால், வேறு யார் மூலமாவது பாலியல் ரீதியாக அச்சிறுமி துன்புறுத்தப்பட்டாரா என்பதுகூட மறைக்கப்பட்டுவிட்டது.

 

குற்றச்சாட்டு-2

இதேபோல்தான், பெங்களூரிலிருந்து சென்னைக்கு சினிமா ஆசையில் வந்துவிட்டதாக கூறினார் செங்கல்பட்டு டோல்கேட்டில் நின்றுகொண்டிருந்த 16 வயது சிறுமி. சினிமா ஆசையில் பெங்களூரிலிருந்து சிறுமி எப்படி யார் மூலம் வந்தார்? அல்லது சினிமா ஆசை கூறி கடத்தப்பட்டவரா? என்பதையெல்லாம் விசாரித்தவர்கள் முறையாக மருத்துவ பரிசோதனை எதுவும் செய்யாமல், கர்நாடக மாநில குழந்தைகள் நலக் குழுமத்துக்கும் தெரியப்படுத்தாமல் அவளது பெற்றோரிடமே அனுப்பிவைத்துவிட்டார்கள். இதனால், சிறுமிக்கு என்ன நேர்ந்தது? சிறுமியை ஏமாற்றி அழைத்த; அழைத்துவந்த குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள்.

 

குற்றச்சாட்டு-3

திருமணமாகி  மூன்று  குழந்தைகள் உள்ள கூவத்தூரைச்சேர்ந்த சுரேஷ் என்பவன் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்துலுக்குள்ளாக்கி கர்ப்பமாக்கிவிட்டான். அம்மாவும் இல்லை, அப்பாவும் வேறு திருமணம் செய்துகொண்ட சூழலில், கர்ப்பமான அச்சிறுமியை தங்கவைத்து பிரசவமும் பார்த்து சட்டப்படி பராமரித்து பாதுகாக்கும் அரசின் அனுமதி பெற்ற இல்லங்கள் இருந்தும்கூட அச்சிறுமியை அவர்களது தூரத்து உறவினர் வீட்டுக்கே அனுப்பிவிட்டார்கள். இரட்டை குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தையை பாதுகாக்கத் தெரியாததால் ஒரு குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்துவிட்டது.

 

இப்படி, குழந்தைகளை பாதுகாத்து அவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யவேண்டியவர்களுக்கே குழந்தைகள் நலன் என்றால் என்ன அவர்களை எப்படியெல்லாம் பாதுக்காக்கவேண்டுமென்று அரசு விதிகள் உள்ளன? என்பதெல்லாம் தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 

குற்றஞ்சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட சி.டபுள்யூ.சி. உறுப்பினர் தாமோதரனைத் தொடர்புகொண்டு நாம் கேட்டபோது,  முதலில் உங்களிடம்  நான் ஏன் இதுகுறித்தெல்லாம் விளக்கமளிக்க வேண்டும் என்றெல்லாம் கெத்தாக அதிகார தோரணையில் கேட்டவர் பிறகு தனக்கு தெரிந்த சைபர் நிபுணரையும் வழக்கறிஞரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்களிடம் ஒவ்வொருமுறையும்  ஆலோசித்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார், “சக பெண் உறுப்பினர் குளோரி என்பவர் என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால்  சிறுமி  தீபிகாவை அப்படி பேசச்சொல்லி புகார் எழுதி வாங்கிவிட்டார்.

 

இதை, சிறுமி தீபிகாவே எங்கள் கமிட்டி உறுப்பினர்களிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். அதுதான், அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் பகிரப்பட்டது. அதேபோல், எனது டிவிட்டர் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். இதனால், நான் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளேன். ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை எனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 2020 செப்டம்பர்-28 ந் தேதி செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்றவரிடம்,

 

‘உங்களது டிவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்கிறீர்கள். கடைசியாக நீங்கள் டிவிட்டரில் ஷேர் செய்த ஃபோட்டோக்களில் இருக்கும் இளம்பெண் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர். அதாவது, காஞ்சிபுரம் படூர் அருகிலுள்ள பாஞ்சாப் அசோசியேஷன் டெஸ்டிடியூட் ஹோம் ஃபார் சில்ட்ரன் என்கிற இல்லத்திலிருந்து உங்களிடம் குழந்தைகளுக்கான ஆணைகள் வாங்க அடிக்கடி வந்து செல்பவர். அவரது, தனிப்பட்ட புகைப்படம் எப்படி உங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் ஆனது?’ என்று நாம் கேட்டபோது, “அவர், எனது மாணவியும்கூட. அவரது, ஃபோட்டோ எனது செல்ஃபோனில் இருந்தது. அதையும் யாரோ எடுத்து எனது டிவிட்டரில் ஷேர் செய்துவிட்டார்கள்”என்றார்.

 

மற்றொரு சிறுமியும் குற்றச்சாட்டு!

சி.டபுள்யூ.சி உறுப்பினர் தாமோதரனின் புகார் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரின் விசாரணையில்தான் உண்மை வெளிவரும். ஆனால், சிறுமி தீபிகா தாமோதரன் தன்னிடம் நடந்துகொண்டதாக மட்டும் எழுதிக்கொடுக்கவில்லை. இன்னொரு, சிறுமியிடமும் அப்படி தவறாக பேசியதாக குற்றஞ்சாட்டி எழுதிக்கொடுத்துள்ளார். யார், அந்த சிறுமி என்று தெரிந்தால் அச்சிறுமியிடமும் தாமோதரன் தரப்பு விசாரணை என்கிற பெயரில் தாமோதரனுக்கு சார்பாக பேசவைத்து வீடியோ எடுத்துவைத்துக்கொள்ளும். அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் அச்சிறுமியும் மாற்றி வாக்குமூலம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள்மீதே பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால் காவல்துறையோ அல்லது வேறொரு அமைப்போ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்கிறார்கள்.

 

சி.டபுள்யூ.சி உறுப்பினர் நியமன குளறுபடி!

ஒரு மாவட்டத்திலேயே இப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க எப்படியிருக்கும்? குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ‘தோழமை’ அமைப்பின் தலைவர் தேவநேயனிடம் நாம் கேட்டபோது, “குழந்தைகள் நலக்குழுமத்திற்கான தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தில் தமிழ்நாடு முழுக்க நடந்த குளறுபடியும்கூட இதற்கு மிகமுக்கியக் காரணம்” என்கிறவர்,  “குழந்தைகளுடன் பணிசெய்தவர்கள் என்பது வேறு, குழந்தைகளின் உரிமைகளுக்காக பணியாற்றியவர்கள் என்பது வேறு. ஆனால்,  ஆசிரியர்கள், டியூஷன் எடுக்கிறவர்கள், டாக்டர்கள், குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தவர்கள் என குழந்தைகளோடு பணி செய்தவர்கள்தான் குழந்தைகள் நலக்குழுமத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  

 

ஜே.ஜே. ஆக்ட் (Juvenile Justice (Care and Protection of Children- Act, 2015) எனப்படும் இளம் சிறார் நீதி சட்டத்தின் கீழ் இரண்டுவிதமான அமைப்புகள் செயல்படுகின்றன. வீட்டைவிட்டு ஓடிவரும் குழந்தைகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழைந்தகள், காணாமல் போய்விடுகிற குழந்தைகள், பெற்றோரின் அரவணைப்பு இல்லாத  என அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படுகின்ற குழந்தைகளுக்கு சி.டபுள்யூ.சி (Child Welfare Committee) எனப்படும்  குழந்தைகள் நலக்குழுமம் செயல்படுகிறது.  

 

மற்றொன்று, சட்டத்துக்கு முரணான செயல் செய்யப்பட்டதாக கருதப்படும் குழந்தைகள். இவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஜே.ஜே. போர்டு ( Juvenile Justice Board ) எனப்படும்  இளம் சிறார் நீதிக்குழுமம். காவல்துறையினர், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்கூட தங்களது சீறுடையில் வரக்கூடாது. காரணம், ஒரு குழந்தையை திருடன், திருடி, கொலைகாரன், கொலைகாரி என்று சொல்லிவிட்டால் எதிர்காலத்தில் வாழ்நாள் முழுக்க அப்படி மாறிவிடும்  என்பதால்தான் நீதிமன்றம்போல் விசாரிக்காமல் குழுவாக அமர்ந்து பேசுவார்கள். இச்சிறுவர்களை தங்கவைக்கும் இடத்தை சிறுவர் ஜெயில் என்றெல்லாம் சொல்லக்கூடாது. கூர்நோக்கு இல்லம், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி என்றுதான் அழைக்கவேண்டும்.

 

இப்படிப்பட்ட குழுமங்களுக்கு எப்படிப்பட்ட ஆட்களை அரசாங்கம் தேர்வுசெய்யவேண்டும்? ஆனால், ஆள் தேர்வில் சமூக நலத்துறை முழுமையாக கவனம் செலுத்தாததன் விளைவுதான் அவர்கள்மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்புகின்றன.

 

இரட்டைச்சம்பள மோசடி!

ஒரு உறுப்பினருக்கு ஒருநாளைக்கு 1500 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் என்றால் ஒருநாளைக்கு, 7,500 ரூபாய். மாதத்தில் 20 நாட்கள் என்று  கணக்கிட்டால் 30,000 ரூபாய்.  32 மாவட்டங்களுக்கு ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட சிறப்பூதியமாக 1 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. எல்லா, நாட்களிலும் 5 உறுப்பினர்கள் ஒன்றாக அமர்வதில்லை. அமராமலேயே, ஊதியம் பெற்றுக்கொள்வார்கள். ஒரு சில, குழுமத்தில் ஒருவர் உட்கார்ந்துவிட்டு மற்ற நான்கு பேருக்கு ஊதியம் எடுத்துக்கொள்வதெல்லாம் நடக்கிறது.  இதில், பெரும்பாலனவர்கள் வேறொரு இடத்தில் பணியில் இருந்துகொண்டு சம்பளம் வாங்கிக்கொண்டே இந்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பணிகளிலும் ஈடுபடமுடியும்?

 

பயிற்சியே இல்லாத சி.டபுள்யூ.சி உறுப்பினர்கள்!

கணவன், மனைவி இரண்டு பேருக்கெல்லாம்கூட சி.டபுள்யூ.சி பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதைவிடக்கொடுமை, ஒரு மாவட்ட உறுப்பினர்களாக இருப்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே இருக்கமாட்டார்கள். இளம் சிறார் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய இவர்களுக்கே தங்களது பணிகள் விதிமுறைகள் தெரிவதில்லை. இவர்களுக்கான முழுமையான பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. ஒரே ஒருமுறைதான் பெங்களூரில் பயிற்சி அளிக்கப்பட்டது.  இவர்களை, சமூக பாதுகாப்புத்துறை முறையாக கண்காணிக்கிறதா? மாவட்ட ஆட்சியர்கள் இவர்களிடம் அறிக்கை கேட்கிறார்களா? எத்தனை வழக்குகள் பார்த்தார்கள்? அதில், என்ன தீர்வு கொடுத்தார்கள்? எத்தனை குழந்தைகளின் உரிமைக்காக நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தினார்கள்? அதற்கான, ஆண்டறிக்கையை எந்த குழந்தைகள் நலக்குழுமமாவது வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்களா?  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தனை பள்ளிக்கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறீர்கள்? இப்படி எதுவுமே செய்யாமல் ஏற்கனவே பாலியல் துன்புறுத்தப்பட்டு வரும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தவா இருக்கிறீர்கள்?” என்று சராமாரியான கேள்விகளை எழுப்புகிறார்.

 

ஆக, சீர்திருத்தப்படவேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல… சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும்  குழந்தைகள் நலக்குழுமமும், இளம் சிறார் நீதிக்குழுமமும்தான்.

 

 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.