
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் பகுதியில் உள்ள பாலாற்றில் சட்டவிரோதமாக சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று(12.3.2024) காலை அணங்காநல்லூர் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன்(24) என்பவர் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாட்டுவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த சிலம்பரசன் மீது மாட்டு வண்டியின் சக்கரம் கால் மற்றும் கை பகுதியில் ஏறியது இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சிலம்பரசன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மணல் கடத்தலுக்குச் சென்ற போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்து சிலம்பரசன் உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.