இன்னொரு பொள்ளாச்சி சம்பவமாக வெடித்திருக்கும் கன்னியாகுமரி காமுகன் சுஜி என்கிற காசியின் விவகாரத்தில் வழக்கம்போல விஷயத்தை மூடிமறைப்பதற்கான வேலையில் ஆளுந்தரப்பு தீவிரம் காட்டுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக 90க்கும் மேற்பட்ட இளம்பெண்களைக் காம வேட்டையாடிய சுஜி தற்போது நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன்மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது.
இந்நிலையில், சுஜியின் கூட்டாளிகளான வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களைக் காத்துக்கொள்ள ஆளுந்தரப்பையும், காவல்துறை உயரதிகாரிகளையும் கரன்சியைக் கொடுத்து கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால்தான், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவஹரின் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பதைத் தடுக்கும் விதமாக, இதில் தொடர்புடைய அதிகார கும்பலும், கட்டப் பஞ்சாயத்துக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்களின் மிரட்டலால், நேசமணி நகரிலிருந்து ஆன்லைனில் புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வழக்கை வாபஸ் வாங்கிவிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.
இதற்கிடையே, “குமரி மட்டுமல்லாமல், பிற மாவட்ட, மாநிலப் பெண்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுஜியோடு தொடர்புடைய அதிகார பலமிக்க குற்றவாளிகள் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். எனவே, பொள்ளாச்சி சம்பவத்துக்கு இணையான இந்த வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று மாநில உள்துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு மனு கொடுத்திருக்கிறார்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள்.
மாதர் சங்கத்தினர் உதவியுடன் சுஜியால் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்தோம். அவர் நம்மிடம் பேச மறுத்த நிலையில், அவரது தாயார் பேசினார். "சுஜி கைதாகி ஜெயிலுக்குள்ள இருந்தாலும், அவனைச் சேர்ந்தவங்க இப்போ மிரட்டுறாங்க. போலீஸ்கிட்ட போனா, உன் மகள் ரெண்டு மூணு பேரோட இருக்கிறதை ஊரறிய பரப்பி விட்ருவோம்னு சொல்றாங்க. தினந்தினமும் செத்துக்கிட்டு இருக்கிறோம். இந்த வேதனையே வேண்டாமென்று தான் இப்போ மகளுக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கோம்'' என்று சொல்லி முடிக்கையில் உடைந்து அழுதார்.
இதுதான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தற்போதிருக்கும் மனநிலை என்பதை, அவர்களைத் தேடிச் சென்ற போது உணர முடிந்தது. இதனால், எஸ்.பி. ஸ்ரீநாத் கேட்டுக்கொண்டும் கூட, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மேற்கொண்டு யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. போலீசாரும் இதில் அக்கறை காட்டவில்லை என்றே சொல்கிறார்கள்.
சுஜியால் மனக்குமுறலில் இருக்கும் சிலர் நம்மிடம் பேசினார்கள். “சுஜியால், மார்வாடி பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் சுஜிக்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததே நெசவாளர் காலனியைச் சேர்ந்த மார்வாடி இளைஞர்கள் இருவர்தான். அது தெரிந்தும் போலீசார் அவர்களை விட்டு வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள், குடும்பப் பெண்களை வலையில் வீழ்த்தி, உல்லாசமாக இருந்த சுஜி, திருமணமான பல வசதிபடைத்த இளம்பெண்களுக்கு ஆண் விபச்சாரி போலவும் இருந்திருக்கிறான். அந்தப் பெண்களுக்கு விலையுயர்ந்த சரக்கு மற்றும் அபின் கொடுத்து, உல்லாசமாக இருக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறான்.
மேலும், தன்னால் கர்ப்பமடைந்த இளம் பெண்கள் பலரின் கருவை, நாகர்கோவிலின் பிரபல பெண் மருத்துவர் ஒருவரின் உடந்தையுடன் சுஜி கலைத்திருக்கிறான். அந்தப் பெண் மருத்துவரும் கூட, சுஜியின் உல்லாச லிஸ்டில் இருப்பவர்தான் என்று அதிர்ச்சி கிளப்பினார்கள். இதுகுறித்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஏ.எஸ்.பி. ஜவஹரிடம் பேசியபோது, "சுஜியிடம் இருந்து கைப்பற்றிய செல்போன், லேப்டாப்பில் இருக்கும் தகவல்களை ஆய்வுசெய்து வருகிறோம். அதிலிருக்கும் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு, ரகசிய டீம் விசாரித்து வருகிறது. மேலும், சுஜியின் நண்பர்களான சிலரையும் கண்காணித்து வருகிறோம்'' என்றார்.
மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லீமாரோஸ் கூறுகையில், "சுஜியை இவ்வளவு சீக்கிரமாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் வைத்திருப்பதே சந்தேகத்தைக் கிளப்புகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அவன் மீது புகார் கொடுத்தால், எப்படிப் புகாரை வாங்கி குண்டாஸில் இருப்பவனை விசாரிப்பார்கள்? இது சம்பவத்தைத் திசை திருப்பும் முயற்சியாகத் தோன்றுகிறது அப்படிச் செய்ய நினைப்போரைக் கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க மாதர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து போராடும்'' என்றார் உறுதியுடன்.
அதிகாரம் மற்றும் பணபலம் படைத்தவர்கள் நினைத்த போக்கிற்கு இந்த வழக்கு திசை மாறுவதாக எழுந்திருக்கும் சந்தேகத்தை உண்மையாக்கும் விதமாகவே, செயல்பாடுகள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது பொள்ளாச்சி சம்பவம் போல், கானல் நீராகுமா என்பது கூடியவிரைவில் தெரிந்துவிடும்.