Skip to main content

“அருப்புகோட்டையில் ஒரு செப்டிக் டேங்க் திறக்கப்பட்டிருக்கிறது! அவ்வளவுதான்!” -விளாசுகிறார் பொன்ராஜ்!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018


 

Ponraj


அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டியான வெ.பொன்ராஜ், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளம் தகவல்தொடர்பு விஞ்ஞானியாக பயோடெக்னாலஜி - பயோ இன்பர்மேடிக்ஸ் துறையில் பணியாற்றியவர்.  அந்தப் பல்கலைக்கழகம் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 
 

நாற்றமெடுத்த உயர்கல்வித்துறையை முடை நாற்றமெடுக்க வைத்த ஆளுநர் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும்.  பாலியல் தொழில் பாடமாக்கப்பட்டுவிட்டதா?
 

தமிழக அரசு என்ற ஒன்று இருக்கிறதா, இல்லை இன்றைக்கு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை?
 

அடிமை ஆட்சியின் பரிமாணம் இது!
 

தமிழக அரசே தன் அதிகாரத்தை இழந்து ஆளுநரை திருப்திப்படுத்த படாத பாடு படும் போது, பாவம் குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் ஒரு துணை பேராசிரியை, துணைவேந்தர் தனது பதவி காக்கும் ஆசைக்கு அடிமையாகி, ஆளுநர் தாத்தா இல்லாமல் அவருக்கு இணையான நபர்களை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முயல்வது என்பதை நிர்மலா தேவியின் ஆடியோ உரையாடல் வெளிப்படுத்தியிருக்கிறது.  இது தான் நேர்மையான கவர்னரது, நாணயமான அடிமை ஆட்சியின் பரிமாணம். 
 

ஒரு கல்லூரியில், ஒரு குற்றச்சம்பவம் நடந்தால் அதை காவல்துறை விசாரிக்குமா? இல்லை,  கவர்னர் விசாரிப்பாரா?  சட்டக்கல்லூரியில் ஒரு கலவரம் நடந்தது, அதை காவல்துறை விசாரித்ததா? இல்லை,  கவர்னர் விசாரித்தாரா?
 

பல்கலையில் பாலியல் பாடத்திட்டம்?
 

ஒரு வேளை நிர்மலாதேவி நடத்திய பாலியல் பாடம் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில்  இருக்கிறது என்று கவர்னர் நினைத்து, அது கவர்னது வரம்பிற்குள் வந்துவிட்டது என்று தவறாக நினைத்து,  இது சம்பந்தமாக ஆளுநர் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது.  
 

கவர்னரின் செயல்பாட்டில் நம்பிக்கையின்மை!
 

கவனர் பெயரை இழுத்தாலேயே கவனர் குற்றவாளி என்று தீர்மானித்துவிட முடியாது. ஆனால் கவர்னரது அனிச்சை செயல், துணைவேந்தரது அவசர செயல் அவர்கள் மேல் நம்பிக்கையின்மையை வளர்த்திருக்கிறது.  தனது மேல், தனது அலுவலகத்தின் மேல் குற்றச்சாட்டு வந்த பின் ஆளுநர் என்ன செய்திருக்கவேண்டும், தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சரை அழைத்து இந்த சம்பவத்தை சட்டப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தால், இவர் மீதி விழுந்திருக்கும் களங்கத்தை துடைத்திருக்கலாம்.  கவர்னரது பேட்டியே தேவையற்றது.  அதில் அவரது பதில் எங்கப்பன் குதிருக்குள்  இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது.  
 

அதுமட்டுமல்ல, கவர்னரோடு இவரது அலுவலக அதிகாரிகளுக்கோ, அல்லது கவர்னர் போன்ற உயர் அதிகாரம் கொண்டவர்களுக்கு பெண்களை  ஏற்பாடு செய்ய சொல்லிய குற்றச்சாட்டிற்கு உள்ளான துணைவேந்தர் அவர்களும், கவர்னரும் இணைந்து தாங்களை பற்றிய விசாரிப்பதற்கு குழு அமைப்பது, பெண்ணை விசாரிக்க பெண்ணே இல்லாமல் விசாரணை கமிஷன் அமைப்பது,  பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டது மிகப்பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.  அது மட்டுமல்ல, ஒரு பெண் நிருபரை கண்ணத்தில் தட்டுவது, இவரது செயல்பாட்டில் நம்பிக்கையின்மையை உருவாக்கியிருக்கிறது. கவர்னர் ஒரு நபர் கமிஷன் விசாரணை கமிஷன், தமிழ்நாடு அரசின் காவல்துறை சி.பி.சி.ஐ.டி விசாரணை, யார் சொல்வது உண்மை. யார் எப்படி, எதை விசாரிக்கப்போகிறார்கள்?
 

ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!
 

ஒரு குற்றத்திற்கு இரண்டு விசாரணை எப்படி, அதன் அதிகாரம் என்று கேட்டால் கவர்னர் அனைத்தையும் விசாரிக்கும் என்கிறார். அப்படியென்றால் எதற்கு காவல்துறை விசாரணை. இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் இருக்கும் தமிழக அரசிற்கு எதற்கு ஆட்சிமுறை நிர்வாகம், ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டு செல்லவேண்டியது தானே?  ஒரு அரசின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும் போது, இப்படிப்பட்ட அவலங்கள் நிகழ்ந்து அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள் என்பது சாதாரணம். 
 

அனைத்திலும் முடைநாற்றம்!
 

கல்விதான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. அப்படிப்பட்ட கல்வித்துறையே முடை நாற்றம் எடுக்கும் என்றால், சமுதாயத்தில் எப்படி நறுமணம் வீசும்.  அனைத்திலும் முடைநாற்றமெடுக்கும் தானே? ஒட்டுமொத்த தமிழக அரசே ஊழல் என்ற சாக்கடையில் முடை நாற்றமெடுத்துக்கொண்டிருக்கும் போது, அருப்புக்கோட்டையில் ஒரு செப்டிக் டேங்க் திறக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.  இந்த மூடை நாற்றத்தில் சிக்கிச்சீரழிவது நமது மாணவ, மாணவிகளின் எதிர்காலம் தான். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்த பின்,  தமிழ்நாட்டு அரசின் செயல்பாட்டை பல்வேறு மாவட்டங்களில் தனது அதிகாரத்தை மீறி  ஆய்வு செய்தார்.  அதை ஏற்றுக்கொண்டது இந்த அடிமை அரசு.  தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறையை, துணைவேந்தர் நியமனத்தை, தான்தோன்றித்தனமாக நடத்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தை, இவர் தான்தோன்றித்தனமாக நடத்திய விதமே, நீதிமன்றத்தின் முன் தள்ளுபடியாகும் முழு தகுதியும் பெற்றது.   இவர் நியமித்த அடுத்த மாநில துணைவேந்தர்கள் எந்த தகுதியில், எந்த முறையில் நியமித்தார் என்று விசாரித்தால், அத்துணை பேரது நியமனமும் செல்லாது என்ற நிலை வரும். 
 

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சி!
 

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சத்தில் சிக்கியவுடன், இவர் அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்களையும் அழைத்து இனிமேல் இதுபோல் நடக்கமால் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார். ஒருவேளை லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்ளாமல் வாங்குங்கள் என்று சொல்லி அனுப்பினாரோ இல்லையோ, என்னவோ தெரியவில்லை.  கல்வித் தகுதியையும், திறமையையும், ஆராய்ச்சியையும், மேலாண்மையையும் பின்தள்ளி, துணைவேந்தர்கள் லஞ்சத்தால் தீர்மானிக்கப்படும் போது, உயர் கல்வியும், ஆராய்ச்சியும், பல்கலைக்கழகமும் வீழ்ச்சியடையாமல் என்ன செய்யும்.  ஒரு காலத்தில் ஆராய்சிக்கு பெயர் பெற்ற,  மதிப்புமிக்க துணைவேந்தர்களால் நிர்வாகிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வியில், ஆராய்ச்சியில் தரம் தாழ்ந்து போய் பாலியல் தொழிலில் இறங்கி விட்டது என்ற பெயர் பெற்றது என்றால் எப்படி இருக்கும்.  பல்கலைக்கழகத்தில் உண்மையாக கல்விப்பணி செய்யும், ஆராய்ச்சி செய்யும் எத்தனையோ பெரும்பான்மையான பேராசிரியர்கள் மனநிலை இந்த சம்பவத்தை கேள்விப்படும் போது எவ்வாறு இருக்கும். அதில் படிக்கும் மாணவர்களது மனநிலை எவ்வாறு பாதிக்கப்படும். அதில் வேலை செய்யும் ஊழியர்கள் எவ்வாறு மனம் வருந்துவார்கள். 
 

சிறந்தவர்கள் துணைவேந்தர் ஆகமுடியாது!
 

நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளம் தகவல்தொடர்பு விஞ்ஞானியாக பயோடெக்னாலஜி துறையில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் துறையில் பணிபுரிந்த போது, இந்த பல்கலைக்கழகம் பயோ டெக்னாலஜி துறையில் உலக புகழ் பெற்று இருந்தது,  அதற்கு காரணமானவர்கள் டாக்டர் கே. தர்மலிங்கம், டாக்டர் வேல்தம்பி, டாக்டர் சேகர், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி, டாக்டர் குணசேகரன் போன்ற பலர் இருந்தனர்.  இவர்கள் ஒவ்வொருவரும் இவர்களது துறையில் உலகத்தில் சிறந்த ஆராய்ச்சியாளர்கள், ஆனால் பணம் இல்லாதவர்கள், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள். இவர்களை ஒரு அரசும் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கவில்லை. இதில் டாக்டர் கே. தர்மலிங்கம் அவர்கள் ஆராய்சியில் மட்டும் சிறந்தவர் அல்ல, ஒரு துணைவேந்தராக அனைத்து தகுதியும் பெற்றவர். அவர் கண்டுகொள்ளப்படவில்லை.  ஏனென்றால் பணம் கொடுத்து தான் துணைவேந்தராக வேண்டும் என்றால் அந்த பதவி தேவையில்லை என்று பதவியை துட்சமாக மதித்தவர் அவர். ஏனென்றால் இவர்கள் தனது துறையை, தனது பல்கலைக்கழகத்தை உலகப்புகழ் பெற்ற தங்களது ஆராய்ச்சியின் திறனால் உயர்த்தியவர்கள், இவர்கள் யாருக்காவது துணைவேந்தராகும் வாய்ப்பு கிடைத்திருந்தால், பல்கலைகழகம் பலன் பெற்றிருக்கும். பாவம் லஞ்சம் கொடுத்து துணைவேந்தராக தெரியாத அப்பாவிகள் இவர்கள். ஆனால்,  இன்றைக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி துறையே ஒழிக்கப்பட்டுவிட்டது.  பயோ இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் ஒழிக்கப்பட்டு விட்டது, அதில் வேலை செய்த அனைவருக்கும் சரியான வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை, அவர்களது கோரிக்கைக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை, ஒரு வேளை இவர்களுக்கு நிர்மலாதேவியை உபயோகப்படுத்த தெரியாமல் போய்விட்டது. 
 

நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்!
 

இதில் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அவர்களை, முன்னால் துணைவேந்தர், ஒரு துணை பேராசிரியராக கூட தகுதியில்லாத ஒரு பெண் துணைவேந்தரது ஊழலை எதிர்த்து கேட்டார் என்பதற்காக பழிவாங்கி அவரை ஒழித்தார். இன்றைக்கு இவர் விருப்ப ஒய்வு பெற்று ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் சேர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நல்ல பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நல்ல ஊழியர்கள் இப்படிப்பட்ட நாலந்தர ஊழல் துணைவேந்தர்களால், ஊழல் அதிகாரிகளால், ஊழல் அமைச்சர்களால், ஊழல் முதல்வர்களால், ஊழல் கவர்னர்களால் பழிவாங்கப்படுகிறார்கள். இப்படி கடந்த 30 ஆண்டுகளாக தமிழக உயர் கல்வித்துறை திட்டமிடப்பட்டு லஞ்சத்தால், ஊழலால் செல்லரித்து, ஊழல் என்ற புற்று நோயால் அவசர சிகிச்சையில் இப்பவோ, பிறகோ என்று சாகக் கிடக்கிறது.  
 

யுனிவர்சிட்டி செக்ஸ் ஸ்கேன்டல்!
 

இப்போது இருக்கும் மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்லத்துரை அவர்களோடு நான் பணியாற்றியிருக்கிறேன்.  நான் பார்த்த அளவில் இவர் ஒரு நல்ல பேராசிரியர்.  அவர் விடுதிக்கு கண்டிப்பான வார்டனாக இருந்திருக்கிறார், மாணவர்களுக்கு IAS/IPS பயிற்சியை மிகச்சிறப்பாக நடத்தி நல்ல பெயர் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பதிவாளாராக இருந்திருக்கிறார். ஆளுமை அனுபவம் பெற்றிருக்கிறார். ஆனால் அவருக்கு துணைவேந்தாராகும் ஆசை இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தராக ஆசைப்பட்டால், அடுத்த வினாடி, லஞ்ச சாக்கடையில் விழுந்தால் தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது எழுதப்படாத உண்மை.  இந்த ஆளுநர் வந்த பின் லஞ்சம் இல்லையோ என்னவோ ஆனால் வேறு ஒரு உடன்பாடு உருவாகியிருக்கிறது என்பதை இந்த செக்ஸ் ஸ்கேன்டல் வெளிப்படுத்தியிருக்கிறது. அதை ஆளுநரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல பேராசிரியர், துணைவேந்தரானால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.  இவர் வந்ததும் லஞ்சத்தால்தான் என்று சொல்கிறார்கள். இவர் மீது கடந்த துணைவேந்தருடன் இணைந்து செயல்பட்டதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்கிறார்கள். அது எந்த அளவில் இருக்கிறது என்று தெரியவில்லை.  மதுரை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானதால், அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வி. அதனால் தானோ என்னவோ,  உயர் கல்வி அதிகாரிகளை திருப்திப்படுத்த இந்த செயலில் இறங்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள். அல்லது இவரை பிடிக்காத சிலர் இவரை இப்படி மாட்டி விட்டிருக்கலாம் என்கிறார்கள். எது உண்மை என்று விசாரணையில் தான் தெரியவரும். இதில் பாதிக்கப்படுபவர்கள், உண்மையாக உழைக்கும் பேராசிரியர்களும், கனவுகளோடு படிக்கும் மாணவர்களும் தான், 
 

தேவை அவசர சிகிச்சை!
 

இத்தனை கூத்துக்களுக்கும் அவலங்களுக்கும் காரணமாக இருப்பது இப்போதைய தமிழக அரசு மட்டுமல்ல, கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து தொடர்ந்து கல்வித்துறையை சீரழித்த அரசுகளும் தான். இந்த அவலத்தையும் மாணவர்கள் தான் போராடி சரி செய்ய வேண்டும் என்ற அவல நிலைக்கு தள்ளியிருப்பது, உண்மையிலேயே வேதனைதான்,  அதற்கு காரணம் இந்த அரசை தேர்ந்தெடுத்த மக்கள் தான். மதுரை பல்கலைகழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயர்கல்வித்துறைக்கும்  தேவைப்படுவது அவசர சிகிச்சை. அதற்கு முதலில் தேவைப்படுவது,  இந்த கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்திய ஆளுநரையும், அவருக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகளையும், பல்கலைக்கழக துணைவேந்தரையும் முறையான விசாரணைக்கு உட்படுத்துவதுதான்.   இதை கவர்னருக்கு காவடி எடுக்கும் தமிழக அரசு செய்யுமா என்று தெரியவில்லை. 
 

பேராசிரியை நிர்மலா தேவி ஒரு அம்புதான், ஏவியவர்கள் பிடிபடுவது மாதிரி தெரியவில்லை. மாணவர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்தால் தான் இதற்கு தீர்வு வரும் என்ற நிலை கூடிய சீக்கிரம் ஏற்படும் என்று நினைக்கிறேன். வேறு வழியில்லை, வேறு தீர்வுமில்லை. மாணவர்களே!  மவுனமா? கல்வியின் மாட்சிமையா? என்பதைக் கூடி விவாதித்து தீர்மானியுங்கள்.  


இவ்வாறு கூறுகிறார் பொன்ராஜ்!