Skip to main content

சிவகாசி முருகேசனை ‘சிவனாண்டி’ ஆக்கிய சினிமா! -தேடு தேடென்று தேடியே நனவானது கனவு! 

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

எத்தனை இடையூறு வந்தாலும், யாருடைய உந்துதலும் இல்லாமல்.  ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவதே,  லட்சியம்! அந்த வகையில்,  முருகேசனை  ‘லட்சிய புருஷன்’ என்று தாராளமாகச் சொல்லலாம்.

 

thedu

 

 



யார் இந்த முருகேசன்? அவருடைய லட்சியம்தான் என்ன?

சிவகாசி புதுரோட்டு தெருவில் கடை வைத்து எண்ணெய் வியாபாரம் செய்துவரும்  முருகேசனுக்கு,  எப்பாடுபட்டாவது சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் என்பது முப்பது வருடக் கனவு.  அதற்காக, நடிப்புத் திறமை உள்ள மகா கலைஞன் என்றெல்லாம் அவரைச் சொல்லிவிட முடியாது. நடிப்புக்கான பயிற்சியிலும்கூட தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்டதில்லை. ஏனென்றால், சொந்தத் தொழிலான எண்ணெய் வியாபாரம் அந்தக் கடையிலேயே அவரை முடக்கிப் போட்டது. ஆனால், சினிமா பித்து மட்டும் விடவே இல்லை. சென்னையிலிருந்து கிளம்பி விருதுநகர் மாவட்டத்துக்கு வரும் ஏதாவதொரு உப்புமா கம்பெனி,  ‘ஷூட்டிங்’ என்ற பெயரில் ஏதாவது பண்ணிக்கொண்டிருக்கும். அங்கே முருகேசனைப் பார்க்க முடியும். அவரது உருவத்துக்கும் உயரத்துக்கும் சம்பந்தமே இல்லாத காக்கி யூனிபார்மை அந்த உப்புமா கம்பெனி அவருக்கு மாட்டிவிட்டிருக்கும். ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கும் லோக்கல் ஆட்கள் “எண்ணைய்க்கடை முதலாளிக்கு இதெல்லாம் தேவையா?” என்று, அவர் முகத்துக்கு நேராகவே, உரிமையுடன் கேலி பேசுவார்கள்.

 

thedu

 



முப்பது சினிமாக்களுக்கும் மேல் நடித்துவிட்டதாக முருகேசனால் கணக்கு சொல்ல முடியுமே தவிர,  ‘நீங்கள் நடித்து எத்தனை சினிமாக்கள் வெளிவந்தன? எந்த அளவுக்கு உங்கள் கதாபாத்திரம் பேசப்பட்டது?‘ என்று பதிலுக்கு அவரை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. ஏனென்றால், அதற்கெல்லாம் முருகேசனிடம் பதில் இல்லை. 

தகுதி,  திறமை இருந்தும் சினிமா கனவுகளோடு கோடம்பாக்கத்தைச் சுற்றி வருபவர்களுக்கே சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற உண்மை அவரைத் தூங்கவிடவில்லை. ‘வயதும் கூடிக்கொண்டே போகிறது. தனது நடிப்புத் திறமைக்கு(?) ஏற்ற ‘ரோல்’ தருவதற்கெல்லாம், தமிழ் சினிமா உலகத்தில் யாரும் இல்லை..’ என்பது, அவருக்கே புரிந்துபோனது.  தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார்.

சொந்தமாக ஒரு சினிமா தயாரித்து, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சொந்த ஊரான சிவகாசியில் எங்கு பார்த்தாலும் தன்னுடைய முகம் பெரிதாகத் தெரியும்படி வால்போஸ்டர் ஒட்டி, உள்ளூர் தியேட்டர் ஒன்றில் சொந்தபந்தங்களையாவது அந்தப் படத்தைப் பார்க்க வைத்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் திட்டமிட்டார். வெற்றிகரமாக அதை நிறைவேற்றியும் விட்டார். ஆம். அவர் தயாரித்து நடித்த ‘தேடு’ என்ற திரைப்படம், கடந்த 3-ஆம் தேதி,  சிவகாசி ஸ்ரீபழனியாண்டவர் தியேட்டரில் மட்டுமல்ல, சென்னை- ஏவிஎம் ராஜேஸ்வரி, கோயம்பேடு-ரோகினி, அனகாபுத்தூர்-வெல்கோ, பொன்னேரி-வெற்றிவேல் முருகன், காஞ்சிபுரம்-அருணா, கள்ளக்குறிச்சி நவநீதம், வேலூர் குரல், கோவை கே.ஜி.காம்பளக்ஸ், மதுரை அண்ணாமலை என உலகமெங்கும்(?) ரிலீஸானது.

 

thedu

 



தேடு திரைப்படம் எப்படி?

தியேட்டருக்கு தன் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்திருந்தார் தயாரிப்பாளர் சிவகாசி முருகேசனின் உறவினர் மாரியப்பன். “படம் சூப்பர்.. மச்சான் நடிப்பு சூப்பர்..” என்றார். சற்று தள்ளி நின்ற பெரியவர் ஒருவரிடம் கேட்டோம். “கன்னட டப்பிங் படம் மாதிரி இருக்கு.  பரவாயில்ல..” என்றார். மற்றொருவர் “என்னத்தயோ காச கொடுத்துட்டு வந்து தியேட்டர்ல உட்கார்ந்துட்டு போவேன். நல்லா இருக்கு.. நல்லா இல்லைன்னு சொல்லத் தெரியாது.” என்று ஒரு மார்க்கமாகப் பேசினார். 

தேடு திரைப்படத்தின் இயக்குநர் ஈஸ்வரோ “மது மயக்கம், காதல் மயக்கம், செல்பி மயக்கம் என முப்பரிமாணம் கொண்ட இந்தக்கதையில், மயக்கம் கலைந்து,  தவறுகளைக் களைந்து, இலக்கை  அடைகிறார்களா என்பதைத்தான்  இந்த சினிமா மூலம் சொல்லியிருக்கிறோம்.” என்கிறார்.

காதலர்களாக சஞ்சய்-மேக்னா ஜோடியும், வில்லனாக சிவகாசி முருகேசனும் நடித்திருக்கும் இந்தப் படத்தை விமர்சனம் செய்திருக்கும் ஒரு இணையதளம் சிங்கிள் ஸ்டார் அளித்து,  1/5 என ரேட்டிங் தந்திருக்கிறது.

முருகேசன் ஒரு லட்சிய புருஷன் என்பதை நாம் அறிந்ததாலோ என்னவோ,  தேடு திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த சிவனாண்டி கேரக்டர் மட்டுமே நம் கண்ணுக்கு நிறைவாகத் தெரிந்தது. ‘நான்தான்டா புரொடியூசர்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், காட்சிக்கு காட்சி முருகேசன் வந்து போனார். அதுவும் காலா ரஜினி ரேஞ்சுக்கு,  படம் முழுவதும் அவருக்கு கருப்பு காஸ்ட்யூம்தான். வில்லன் அல்லவா? எந்நேரமும் உடலை விரைப்புடன் வைத்துக்கொண்டு, விழிகளை உருட்டியபடி, சண்டைக் காட்சியில் உருண்டு புரண்டு, அந்தக்கால ஸ்டேஜ் ஆர்டிஸ்ட் மாதிரி வசனத்தை உரக்கப் பேசி, அழகியுடன் குத்தாட்டம் ஆடி, பாசமலர் சிவாஜி போல  ஒரு காட்சியில் குமுறி அழுது கண்ணீர் விட்டு, அவரால் முடிந்த அளவுக்கு நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.

தமிழ்த்திரையுலக வரலாற்றில்  எம்.கே.டி.பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி என எத்தனையோ ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர். கடும் முயற்சியால், அந்த வரலாற்று பக்கங்களில் எப்படியோ முருகேசனும் ஒரு ஓரத்தில் பதிவாகிவிட்டார். தன் நடிப்புப் பசிக்காக, தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்க, முருகேசன் கொடுத்த விலை இருக்கிறதே? அந்த விலையை.. ஸாரி.. வலியை அவரால் மட்டுமே உணர முடியும்!

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவத் தேவை நிறைவேறியதா? - ‘நாடு’ விமர்சனம்!

 

naadu movie review

 

நம் நாடு இத்தனை ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிகள் பெற்ற நிலையிலும் இன்னமும் பல்வேறு மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் இன்றளவும் நிலவத்தான் செய்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு மலைக் கிராமத்தில் உள்ள மக்கள் சின்ன சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கு கூட சரியான மருத்துவம் கிடைக்காமல் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை நாடு படம் மூலம் நம் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் இயக்குநர் சரவணன். சில படங்களால் சருக்கல்களைச் சந்தித்த இயக்குநர் சரவணன் நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா?

 

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கொல்லிமலையில் அமைந்துள்ள தேவநாடு என்ற கிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரிய எந்த டாக்டரும் முன் வரவில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும் உடனடியாக டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். அடிப்படை வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத அந்த மலை கிராமத்தில் எந்த மருத்துவரும் சேவை செய்ய முன்வராத காரணத்தினால், பிரச்சனை கலெக்டர் அருள் தாஸ் வரை சென்று விடுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியில் தானே இதற்கு முழு பொறுப்பு ஏற்று தன் மகளான டாக்டர் மகிமா நம்பியாரை அந்த கிராமத்திற்கு மருத்துவம் பார்க்க அனுப்புகிறார் கலெக்டர் அருள் தாஸ்.

 

அந்த கிராமத்துக்கு வரும் டாக்டர் மகிமா நம்பியாரை நல்லபடியாக கவனித்துக் கொண்டு அவருக்கு போதுமான வசதிகளை ஊர் மக்கள் செய்து கொடுத்து மகிமாவை அந்த ஊரை விட்டு செல்லவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது என ஊர் மக்களிடம் கலெக்டர் தெரிவிக்க, நாயகன் தர்ஷன் உள்ளிட்ட ஊர் மக்கள் மருத்துவர் மகிமாவை அந்த கிராமத்திலேயே எப்படியாவது தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கிராம மக்கள் எடுக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா? மகிமா இந்த ஊரிலேயே இருந்து மருத்துவம் பார்த்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக அதுபோல் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் முயற்சியில் பல்வேறு சருக்கல்களை சந்தித்த இயக்குநர் சரவணன், தற்பொழுது நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறார். மலைக் கிராமம் மலைவாழ் மக்களின் வாழ்வியல், அவர்களுக்குள் இருக்கும் ஏக்கம், இன்பம், சோகம், விசுவாசம் என அந்த கிராம மக்களின் வலி வேதனைகளை அப்படியே கண்முன் நிறுத்தி அதை அழுத்தமாகவும் ஆழமாகவும் நெகிழ்ச்சியாக ரசிக்கும்படி கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார். இது ஒரு சிறிய கதையாக இருந்தாலும் இதற்கான திரைக்கதையை எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தி அதையும் ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

 

படத்தில் பல இடங்களில் மனதை கணக்க செய்து கண்கலங்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும் அதனுடன் கலகலப்பான சில பல காட்சிகளையும் வைத்து கலகலப்பாகவும், கலங்கடித்தும் கதையை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு புதுமையான சிறிய கதையை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட கிளிஷேவான காட்சிகள் எங்கும் இல்லாமல் பார்த்துக்கொண்டு குறிப்பாக நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் நாம் எதிர்பார்க்கும்படி இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு படத்தை கரை சேர்த்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டில் இன்னமும் இப்படியான கிராமங்கள் நம் நாட்டில் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அங்கு நடக்கும் அவலங்களையும் பாரபட்சம் இன்றி காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். 

 

பிக் பாஸ் புகழ் நாயகன் தர்ஷன் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதற்கான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும், அமைதியான வசன உச்சரிப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுத்த ஸ்பேசில் எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத நடிப்பை வெளிப்படுத்தாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாயகி மகிமா நம்பியார் வழக்கமான நாயகியாக இல்லாமல் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்து எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நிறைவாக செய்து தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

முக்கியமாக படத்தில் காதல் காட்சிகள் இல்லாதது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அதை சரிவர செய்து ரசிக்க வைத்துள்ளார். கலெக்டராக வரும் அருள்தாஸ் இந்த படத்தில் நல்ல அரசு அதிகாரியாக நடித்திருக்கிறார். பொதுவாக வில்லன் வேடங்களிலேயே நடிக்கும் அவர் இந்த படத்தில் ஒரு நிறைவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மனதில் பதிகிறார். மகிமாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷனின் அப்பாவாக நடித்திருக்கும் மறைந்த ஆர்.எஸ். சிவாஜி தன் அனுபவ நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். தர்ஷனின் நண்பராக நடித்திருக்கும் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளார். 

 

பாடல்களை காட்டிலும் சத்யாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. அழுத்தமான கலங்க வைக்கும் காட்சிகளில் அழகான இசையை கொடுத்து கலங்கடித்துள்ளார். சக்திவேலின் ஒளிப்பதிவில் மழையும் அதை சுற்றி உள்ள கிராமங்களும் அழகாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டில் உள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகள் என்ற மிக அவசியமான ஒரு முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்த இயக்குநர் சரவணன் அதை ஒரு கதைக் கருவாக வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு எளிமையாகவும் அதேசமயம் எதார்த்தமாகவும் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும் படியும், கலங்கடிக்கும் படியும், மனதில் ஆழமாகப் பதியும் படியும் கொடுத்து படத்தை கரை சேர்த்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைதட்டலும் பெற்றிருக்கிறார்.

 

நாடு - அவசியம்!

 


 

Next Story

போலீஸ் நாயகன் வென்றாரா? - ‘சூரகன்’ விமர்சனம்!

 

Sooragan movie review

 

கவனம் ஈர்க்கும் முயற்சியில் வாரம் குறைந்தபட்சம் இரண்டு மூன்று சிறு முதலீட்டு படங்கள் திரையுலகில் வெளியாகி அதில் சில படங்கள் வரவேற்பையும் பெறுகின்றன. அந்த வரிசையில் இணைய முயற்சி செய்து வெளியாகி இருக்கும் சூரகன் திரைப்படம் பார்ப்பவர்களை கவர்ந்ததா?

 

சில காரணங்களால் பணி நீக்கத்தில் இருக்கும் போலீஸ் நாயகன் கார்த்திகேயன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்பொழுது ரோட்டில் ஒரு பெண் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு கிடக்கிறார். அவரை நாயகன் கார்த்திகேயன் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார். போன இடத்தில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண்மணி இறந்துவிடுகிறார். அவர் எப்படி இறந்தார்? அந்தப் பெண்மணி இறப்பிற்கு யார் காரணம்? அது கொலையா? அல்லது விபத்தா? என்று துப்பறிய களம் இறங்குகிறார் சஸ்பென்ஷனில் இருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி கார்த்திகேயன். இறுதியில் அந்தப் பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பதை நாயகன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதிக் கதை.

 

நாம் ஏற்கனவே பார்த்து பழகிய மர்டர் மிஸ்டரி கதையாக இது இருந்தாலும் அதை சற்றே விறுவிறுப்புடன் கூறி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கீதா குமார். ஒரு சிறிய பட்ஜெட்டில் எந்த அளவு விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு விறுவிறுப்பாக கொடுத்து முடிந்தவரை அயர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். படத்தில் நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து யூகிக்கும்படி இருப்பதை மட்டும் சற்றே தவிர்த்திருக்கலாம்.

 

புதுமுக நாயகன் கார்த்திகேயன் மிடுக்கான தோற்றத்துடன் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ்க்கு உண்டான ஆக்ரோஷமும் அதற்கான உடல் மொழியும் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்லும் நடிகை சுபிக்ஷா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை தனக்கு கிடைத்த ஸ்பேசில் சிறப்பாக செய்திருக்கிறார்.

 

வில்லன் வின்சென்ட் அசோகன் எப்பொழுதும் போல் இந்த படத்திலும் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் பயமுறுத்தும்படி அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் சில பல காட்சிகளே வந்தாலும் இறுதிக்கட்ட காட்சிகளில் அதிரடியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், வினோதினி ஆகியோர் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

 

ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அச்சு ராஜாமணி இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை ஓகே. கிரைம் திரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் சதீஷ் கீதா குமார் அதை சற்றே யூகிக்கும்படி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

சூரகன் - நேர்மையானவன்!