Skip to main content

“ராகுலின் இம்முன்னெடுப்பு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தும்..” - செல்வப்பெருந்தகை 

Published on 06/09/2022 | Edited on 10/09/2022

 

selvaperunthagai talk about congress unity journey

 

காங்கிரஸ் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை  ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு நாட்டு மக்களை சந்திக்கவுள்ளது. இந்த பயணம் வரும் வியாழன் அன்று தொடங்குகிறது. இதனை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதற்காக இன்று ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார். 

 

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையிடம் நாம் பேசினோம். அப்போது அவர், "வியாழன் காலையில் ராகுல் காந்தியின் தந்தை நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மாலையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் ஒற்றுமை பயணத்தை கையில் தேசியக் கொடி  ஏந்தி தொடங்க உள்ளார். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்த பிறகு ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அடுத்த நாள்(8.9.20022) காலையில் கன்னியாகுமரியில் காலை 7 மணிக்கு நடை பயணத்தை தொடங்கி 10.30 மணிக்கு முடிக்கின்றோம். அதனை பிறகு மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு முடிக்கிறோம். இப்படியான பயணத்தில் 10 ஆம் தேதி தமிழக எல்லையை கடந்து திருவனந்தபுரத்தின் வழியாக எங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்" என்றார். 

 

சமீபத்தில் காங்கிரஸில் இருந்த கபில் ஷிபில் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விலகியதோடு, ராகுல் காந்தியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்?

 

"ஒரு பரிணாம வளர்ச்சி வரும்போது சில சிக்கல்களும், நடைமுறை பாதிப்புகளும்  ஏற்படும். அதுபோலத்தான் தற்போது, ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும், மூத்தவர்களே பதவிகளை ஆக்கிரமிக்க கூடாது, எல்லா சமூகத்திற்கு பரவலான அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற தெளிவான எண்ணத்தில் உள்ளார். ஆனால் குற்றச்சாட்டு வைப்பவர்கள் எல்லாம் பழமைவாதிகள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகளாக பதவிகளில் இருந்தவர்கள், அவர்களுக்கு இந்த ஆட்சி, அதிகாரம், பொறுப்புகள் இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இது போன்ற வெறுப்புகளை வாரியிறைத்து விட்டு வெளியே சென்று விடுகின்றனர். இதை நாங்கள் எதிர்பார்த்தது தான்" என்று பதிலளித்தார். 

 

ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குழந்தைத்தனமாக இருக்கு என்று குலாம் நபி ஆசாத் விமர்சிக்கிறார்?

 

"இன்றைக்கு பிரதமர் நரேந்திர மோடியை தைரியமாக எதிர்க்கிற, அவர்கள் செய்யும் செயல்களை தட்டிக்கேட்கும் தலைவர் ராகுல் காந்தி மட்டும் தான். அப்படி இருக்கும்போது இந்த விமர்சனத்தை வைக்கும் குலாம் நபி ஆசாத் பிரதமரின் செயலை தட்டி கேட்கவேண்டியது தானே. அவர்களால் முடியவில்லை, அதனால் ராகுல் செய்கிறார். அப்படி இருக்கையில் ராகுல் காந்தியை எப்படி குழந்தைத்தனம் என்று விமர்சிக்க முடியும். போகிற போக்கில் எதையாவது வாரியிறைச்சிட்டு போகிறார்கள்" என்றார். 

 

காங்கிரஸின் முகமாக இருக்கும் ராகுல் காந்தியை மையமாக வைத்துத்தான் ஒற்றுமை பயணம் நடைபெற உள்ளது, அப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வைத்து வேறொருவரை தலைவரை தேர்ந்தெடுப்பது எப்படி சாத்தியமாகும்?

 

"காங்கிரஸ் என்றால் ராகுல் காந்தி, ராகுல் காந்தி என்றால் காங்கிரஸ்.  தொண்டர்கள் ராகுலை வேறுபடுத்திப் பார்க்கவில்லை. தலைவர்கள் வேண்டுமென்றால் வேறுபடுத்தி பார்க்கலாமே தவிர தொண்டர்கள் எப்போதும் ராகுல் காந்தியை தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ராகுலும் தொண்டர்களின் பக்கம் நிற்கிறார், அவர்களின் குரலுக்கு செவி சாய்த்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.

 

பாஜகவில் இன்றிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளாக மோடி மற்றும் அமித்ஷா எடுக்கும் முடிவுகளை  அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது போன்ற பக்குவம் ஏன் காங்கிரஸுக்கு வரவில்லை?

 

நீங்கள் சொல்வது தவறு. பாஜகவில் மோடியும் முடிவெடுக்க முடியாது, அமித்ஷாவும் முடிவெடுக்க முடியாது. பாஜகவில் எப்போதுமே முடிவெடுப்பது ஆர்.எஸ்.எஸ் அவர்கள் நாக்பூரிலிருந்து என்ன செயல் திட்டம் கொடுக்கிறார்களோ அதைத்தான் இவர்கள் செயல்படுத்துகிறார். இவர்கள் எங்கள் கட்சியை போன்று செயல்பட்டால் இவர்களையே ஆர்.எஸ்.எஸ் பதவியிலிருந்து எடுத்து விடுவார்கள்" என்றார். 

 

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக செல்கிறது மறுபுறம் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று நிதிஷ் குமாரும், சந்திரசேகர ராவும் சொல்கிறார்கள். அந்த முழக்கத்தை ஏன் காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை?

 

ஒருவர் இல்லாமல் இந்த நாட்டை உருவாக்குவோம் என்று சொல்வது என்ற அநாகரிக கருத்தை சொல்ல நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் சொல்வது போன்று நாங்கள் ஒருபோதும் சொல்லமாட்டோம். அது ஒரு அரசியல் கட்சி, நாங்கள் ஒரு அரசியல் கட்சி. இங்கு யாரும் யாரையும் அழிக்க முடியாது. அவர்களின் சித்தாந்தம் இந்துத்துவாவை வளர்த்தெடுப்பது, நாங்கள் எல்லோருக்குமான கட்சி" என்றார். 

 

இறுதியாக இந்த ஒற்றுமை பயணம் பாதை யாத்திரை மிக பெரிய திருப்புமுனையை எதிர்படுத்தும். எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்