அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (15.12.2020) திருச்சியில் நடைபெற்றது. இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அக்கூட்டத்தில், "அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில், இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற சபாநாயகராகவும் இருந்த மூக்கையா தேவரின் திருவுருவப்படத்தைச் சட்டமன்றத்தில் வைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சத்திரம் பேருந்து நிலையத்திற்கு, சுதந்திரப் போராட்ட தியாகி ரத்தினவேல் தேவர் பெயரை சூட்ட வேண்டும். அதேபோல, திருச்சி விமான நிலையத்திற்கு ராஜராஜசோழன் பெயரை சூட்டவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஜனவரி 23 ஆம் தேதி, நேதாஜி பிறந்த நாளன்று, திருச்சி மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகனும் தேனி எம்.பியுமான ரவிந்திரநாத், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். ஜனவரி 23ல் நடைபெறும் மாநாட்டிற்குப் பிறகு, தொகுதிகள் குறித்து அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்" இவ்வாறு செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.