Skip to main content

உங்கள் நாற்காலியே நாங்க போட்ட பிச்சை; நீங்க எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பீங்களா..?" - சீமான் கொந்தளிப்பு!

Published on 09/02/2022 | Edited on 10/02/2022

 

x்ி


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நடப்பு அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, " தமிழகத்தில் வரப் போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிட இருக்கிறது. தமிழகத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.  அந்த வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மாற்றத்திற்கான நம்முடைய விதை, தொடர்ந்து விதைக்கப்படும். 

 

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றம் நடந்து விடாதா என்ற ஏக்கத்தில் மக்கள் மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து ஏமாந்து போய் உள்ளனர். இந்த தேர்தலில் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தோழர்கள் மக்களைச் சந்தித்து வருகிறார்கள். இன்றைக்கு இதை செய்வேன் அதை செய்வேன் என்று சொல்வது என்பது தேர்தலை மனதில் வைத்து கூறப்படும் ஒன்றுதான். இன்று மஞ்சள் பை என்கிறார்கள், நெகிழியை முழுவதும் ஒழிக்காமல் மஞ்சள் பயன்பாடு என்பது யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. ஒன்றை முழுவதும் ஒழித்துவிட்டால் தானே நல்லதை மக்கள் பயன்படுத்துவார்கள். நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்பது அரசாங்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று அரசியல் கட்சியினரை மட்டுமல்ல, சராசரி மனிதரை இந்த அறிவிப்புக்கள் குழப்பும். அரசாங்கம் ஒரு தெளிவோடு இருக்க வேண்டும். ஏனோ தானோ என்று இருப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்.

 

மேலும் எங்கள் தம்பிகளை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விடாமல் கடத்துகிறார்கள். நாங்கள் தான் எங்கேயும் வெற்றிபெறவில்லை என்று போகிற இடங்களில் எல்லாம் கூறி வருகிறீர்களே, அப்புறம் எதற்காக எங்களை பார்த்து இந்த அளவுக்கு பயப்படுகிறீர்கள். மூன்று நாட்கள் எங்கள் பிள்ளைகளை கடத்தி வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் செய்துள்ளீர்கள். நீங்கள் தான் பெரிய கட்சி என்று சொல்கிறீர்கள், ஆனால் சிறிய கட்சியான எங்களை கண்டு நடுநடுங்குகிறீர்கள். இன்றைக்கு கவுன்சிலர் தேர்தலுக்காக கொலை நடக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட இந்த அளவுக்கு பிரச்சனை நடக்கவில்லை. கொலை அளவுக்கு ஏன் போகிறது? ஏனென்றால் அப்போதுதான் சம்பாதிக்க முடியும். கட்டடம் கட்டினால் லஞ்சம், மின் இணைப்புக்கு லஞ்சம், அனைத்திற்கும் லஞ்சம். இவை அனைத்தும் விரைந்து நடக்க வேண்டுமானால் கவுன்சிலர் கையெழுத்து வேண்டும். அதற்காக அவர் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்க முடியும். இதற்காக தனக்கு கிடைக்கும் கவுன்சிலர் சீட்டு வேறு யாருக்காவது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் அதற்காக எதிர் தரப்பினரை கொலை செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி. இதுதான் தற்போது மேடவாக்கம் உள்ளிட இடங்களில் நடைபெற்றுள்ளது. 

 

தற்போது சமூகநீதி கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். முதலில் முதல்வரை சமூகநீதி என்றால் என்ன என்று பத்து நிமிடம் பேச சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் அது பற்றி தெரிந்துகொள்கிறோம். உங்கள் கட்சி எத்தனை இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் முஸ்ஸிம் சமூக மக்களுக்கு வழங்கியது. ஒரே ஒரு இடம். அதுவும் கூட்டணிக்கு கட்சிக்கு வழங்கி அங்கே நவாஸ் கனி வெற்றி பெற்றார். நீங்கள் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட முஸ்ஸிம் சமூகத்தை சேர்ந்த யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. இது தான் சமூகநீதியின் அடையாளமா? சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொண்டு இடஒதுக்கீடு வழங்க இவர்கள் தயாராக இருக்கிறார்களா? வாக்கு கேட்க மட்டும் தலைகளை எண்ணி 5 வாக்குக்கு 5 ஆயிரம் பணம் கொடுக்க தெரிகிறதே, அதே போல் வகுப்புவாரி இடஒதுக்கீடு செய்ய வேண்டியதுதானே? அதில் உங்களுக்கு என்ன தயக்கம், அதை விட்டுவிட்டு இந்தா நீங்க வாங்க 3 சதவீதம், உங்களுக்கு 2 சதவீதம் என்று கொடுக்க என்ன கட்டாயம் இருக்கிறது. 50 பேர் இருக்கிற இடத்தில் 5 பேரின் சாப்பாட்டை கொடுத்தால் இதுதான் சமூக நீதியா? உங்கள் நாற்காலியே நாங்கள் போட்ட பிச்சை, நீங்கள் என்ன எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறீர்கள், உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தார்கள். இதற்கு எல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வரும்" என்றார்.