‘மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு இந்த (2016) தேர்தலில் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அந்த ஜோதிடரைக் கேட்டார் ஜெயலலிதா. ‘இந்தியத் தேர்தல் வரலாற்றில், எந்த மாநிலத்திலும், எந்தவொரு பிரதான கட்சியும், அத்தனை தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டதில்லை. அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும். இது மட்டும் நடந்துவிட்டால், 2016-லும் நீங்களே முதலமைச்சர். ஜோதிட கணிப்பின்படியே இதை நான் சொல்கிறேன்’ என்று ஜோதிடர் கூற, மறுப்பேதும் சொல்லாமல், அந்த ஆலோசனையைக் கேட்டதோடு, செயல்படுத்தவும் முனைந்தார்.
ஜோதிட நம்பிக்கையை மனதில் நிறுத்தியபடி, ஜெயலலிதா மிகச்சரியாக காய் நகர்த்தியதில், தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள், மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் தனியாக ஒரு அரசியல் கூட்டணி அமைத்தன. அதிமுக தலைமையான ஜெயலலிதாவோ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய குடியரசு கட்சி, கொங்கு பேரவை கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளில், அத்தனை வேட்பாளர்களையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு, 28 ஆண்டுகள் கழித்து, அதிமுகவின் தொடர் வெற்றி.. தொடர் ஆட்சி என்பது, ஜெயலலிதா தலைமையில் 2016ல் முதல் முறையாக அமைந்தது.
ஜெயலலிதா இறக்கும் வரையிலும், ஜோதிட ஆலோசகராக அந்த ஜோதிடர் மட்டுமே இருந்தார். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் சசிகலா. இந்த 2021 தேர்தல் முடிவுகளை, ஜோதிட ரீதியாக அறிந்ததனாலேயே, அரசியலில் இருந்து, அவர் தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறார்.
கரன்ஸி கணக்கால் கசந்துபோன அரசியல் கணக்கொன்றும் இருக்கிறது. அந்த ‘தாய்’ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, ‘சிறிய’ தாயைப் பார்ப்பதற்காக, சாமியானவரும் மணியானவரும் தினமும் அந்த மருத்துவமனைக்கு வந்தார்கள்; காலில் விழுந்து ஆலோசனை பெற்றார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், இருப்பு வைத்திருந்த கோடானு கோடிகளெல்லாம் செல்லாத நோட்டுகள் ஆகிவிட, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஒவ்வொன்றிலும், இருநூறுக்கும் மேற்பட்ட கணக்குகளை முன் தேதியிட்டு ஆரம்பித்து, அனைத்தையும் மாற்றினார்கள். அந்தப் பணமெல்லாம் ‘சாமி’ வசம் இருந்ததாலேயே, அவர் ‘முதல்’ இடத்துக்கு கொண்டுவரப்பட்டார். துரோகமிழைத்து, தற்போது வரையிலும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அவருடைய ஜாதகப்படி, இந்த நிலை நீடிக்காது.
‘பெரியவங்க’ தன்னுடைய எதிர்காலத்தை மட்டுமே தெரிந்துகொள்ள, ஜோதிடம் பார்ப்பவரல்ல. ஒருதடவை, அந்த ‘ஸ்டார்’ ஜாதகத்தைக் காண்பித்து, ‘இது எப்படியிருக்கு?’ என்று கேட்டுள்ளார். ‘திருவோண நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னம் இவருடையது. தன்னுடைய வாழ்க்கையில், அரசியல் கட்சி என்று இவர் ஆரம்பித்தால், உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஜோதிட நம்பிக்கை மிகுந்துள்ள இவர், நிச்சயம் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை’ என்று அப்போது கணித்துச் சொல்லப்பட்டுள்ளது.
அதே பெரியவங்க, 2016, மார்ச் 1-ஆம் தேதி, இன்னொரு ஜாதகத்துக்கு ‘பலன்’ கேட்டுள்ளார். ‘பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னம் இவருடையது. சனி மஹா திசையில், புதன் புத்தி நடக்கும் 03-02-2021 முதல் 12-10-2023 வரையிலான காலக்கட்டம் நன்றாக உள்ளது. அப்போது, இவர் முதல் இடத்துக்கு வருவார்’ என்று கணித்துச் சொல்லப்பட்டதும், ‘அதுவரையில் நான் இருக்கப்போவதில்லை’ என, தனது ஆயுள் காலத்தை தெரிந்தவராக, ‘பளிச்’ என்று சிரித்துள்ளார்.
‘தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்..’ எனக் கட்டுரையின் தலைப்பே அமைந்துவிட்டபோது, சட்டமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில், ‘பலம் உள்ள இரு கட்சிகளின் ‘பலன்’ என்னவென்று துல்லியமாகச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டோம், அந்த ஜோதிடரிடம். ‘ஒரு கட்சி உருவானது மகர ராசியில். இன்னொரு கட்சி உருவானது மிதுன ராசியில். மகர ராசிக்கு ஏழரை சனி ஜென்ம குரு. மிதுன ராசிக்கு அட்டமத்து சனி, அட்டமத்து குரு. ஆனால், தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி, குரு அதிசாரத்தில், அதிகாலை 1 மணிக்கு கும்பத்துக்கு வந்துவிடுகிறார். மிதுன ராசி கட்சிக்கு 9-ஆம் இடத்துக்கு குரு வந்துவிடுகிறார். மகர ராசி கட்சிக்கோ, 2-ஆம் இடத்துக்கு குரு வருகிறார். இரண்டாமிடம் பெரிதா? ஒன்பதாவது இடம் பெரிதா? இதிலென்ன சந்தேகம்? ஒன்பதாவது இடம்தான். இன்னும் நிறைய சொல்லலாம். ஜோதிட வார்த்தைகளை எல்லாரும் புரிந்துகொள்ள முடியாது.’ என்று அவர் ‘பிரேக்’ விட, ‘வெற்றி பெறும் கட்சிக்கு கிடைக்கும் இடங்கள் எத்தனை என்று கணித்துள்ளீர்களா?’ எனக் கேட்டோம். ‘மிதுன ராசி கட்சி 165-லிருந்து 175 இடங்களில் வெற்றிவாகை சூடும்’ என்று அடித்துச் சொன்னார், தனது ஜோதிட கணிப்பின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையில்.
ஜாதகக் கட்டம், ஜோதிட கணிப்பெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்! வாக்காளர்கள் போடும் கணக்கென்னவோ?
தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதா ‘என்னென்ன’ செய்தார்? - தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமும்! #2