Skip to main content

"இது சின்ன சம்பவம் என்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையும் சின்ன சம்பவம் என்பார்களா?" - கமல் கேள்வி!

 

ே்ி

 

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருந்து வந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார்கள். தங்களின் வெற்றியை உறுதிசெய்ய அதிக முனைப்பு காட்டினார்கள். அந்த வகையில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல் அந்த தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், தேர்தல் தொடர்பாக நடிகர் கமலிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு, 

 

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தீர்கள். உடல்நிலை நலிவுற்று இருந்த நேரத்தில் இது உங்களுக்கு சிரமமாக இல்லையா? அதைக் கடந்து இந்தப் பிரச்சாரம் எப்படிச் சாத்தியப்பட்டது? 


உடல் நன்றாகத்தான் இருக்கிறது. காலில் தான் வலி இருக்கிறது. சர்ஜரி முடிந்து ஓய்வு எடுக்க வேண்டிய காலகட்டத்தில் நான் பிர்ச்சாரத்தை ஆரம்பித்துவிட்டேன். அதனால் என்னால் சரியான முறையில் ரெஸ்ட் எடுக்க முடியவில்லை. அதையும் தாண்டி மீண்டும் ஒரு சின்ன அடி அங்கேயே பட்டுவிட்டது. இருந்தாலும் மக்கள் குடுக்கும் வரவேற்பில் என் வலிகள் எல்லாம் மறந்து போகின்றது. 


பாஜக இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வரக் கூடாது என்று கூறியிருந்தீர்கள். அதற்காக, அது வருகிற மாதிரி இருப்பதாகக் கூறப்படுகின்ற இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்திருந்தீர்கள். திமுக கூட்டணியினர் கூட மதவாதம் உள்ளே வந்துவிடக் கூடாது என்கிறார்கள். அதைத்தான் நீங்களும் கூறுகிறீர்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது? 


அது மட்டுமே காரணம் அல்ல, அதுவும் ஒரு காரணம். ஊழல் பெருங்காரணம். மனித வாழ்க்கையே அது தொடர்ந்து பாதித்து வருகிறது. ஏழைகள் இதனால் செய்வதறியாமல் தத்தளித்து வருகிறார்கள். இது முதலாவது காரணமாக இருக்கிறது. அடுத்தடுத்து வருபவை அதன் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். இது தனிமனித இலக்கு அல்ல, நாட்டுக்கே பொருந்தக்கூடியது. எங்களுக்கு அதிகம் பிடித்தது கூட. எனவே ஊழலை முழுவதும் விரட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

 

இந்த தேர்தலில் பிரச்சாரத்துக்காக உ.பி முதல்வர், பிரதமர் உள்ளிட்டவர்கள் எல்லாம் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தார்கள். கோவையில் சிறிய அளவில் கலவரம் கூட ஏற்பட்டது. அந்த கடைக்கு கூட நீங்கள் சென்று  வந்தீர்கள். இந்தப் பிரச்சனையை எப்படிப் பார்க்கிறீர்கள்? 


இது ஒரு சின்னச் சம்பவம். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடுக்கு காரணம் கூட ஒரு சிறிய குண்டுதான். எனவே அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சொல்வார்களா? இவை அனைத்திற்குமே மத்திய அரசின் அனுமதி இருக்கோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. சந்தேகத்தை தாண்டி என்னுடைய கோபமே அதுதான்.


மாநில அரசு பாதுகாப்பைச் சரி செய்திருக்க வேண்டியது முக்கியம் அது அவர்களின் பொறுப்பு என்று சிலர் தெரிவித்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


நான் செய்வதைச் செய்துகொண்டுதான் இருப்பேன். நீங்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஜனநாயக நாட்டில் ஆணையிடும் முறைகளில் பேசுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அதனைச் சிலர் தங்களுக்கு ஏற்ற வகையில் வளைக்கப் பார்க்கிறார்கள். 

 

பாஜக கோவை தெற்குத் தொகுதியில் உங்களுக்குச் சவாலாக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? 

 

பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யவே தெரியாது. அதனால் அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அவர்களுக்குத் தமிழ் தெரியாது. இல்லை என்றால் அவர்கள் ஏன் உபி-யில் இருந்து பிரச்சாரத்துக்கு ஆள் பிடித்துவந்திருக்க போகிறார்கள். இங்கே மொழி முக்கியம். இந்த தவறை காங்கிரஸ் செய்து தோற்றிருக்கிறது. தற்போது இவர்கள் செய்து வருகிறார்கள். 2000 ஆண்டு மொழி, அதனைத் தமிழக மக்கள் மதிக்கிறார்கள். ஆனால், அதற்குரிய மரியாதையை இவர்கள் அளிப்பதில்லை. அதற்கான பலனை இவர்கள் அனுபவிப்பார்கள்.