ஜெயலலிதா இருந்தபோதும் சரி, இறந்தபிறகும் சரி, அவரை மிகப்பெரிய திறமையாளர் என்றும், போல்டான பெண்மணி என்றும், எதற்கும் அசராத இரும்புப் பெண்மணி என்றும், பலமொழி அறிந்த அறிஞர் என்றும் சொந்தக் கட்சியினரும், அவரால் பலனடைந்தவர்களும், மீடியாக்களும் அள்ளிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
ஆனால், அவர் இறந்ததே மிகப்பெரிய மர்மமாக இன்னும் நீடிக்கிறது. இத்தனைக்கும் மத்திய அமைச்சர்கள் அப்போலோ மருத்துவமனையில் காவல் காத்தார்கள். வெளிநாட்டு மருத்துவர்களும், இந்தியாவின் உயரிய எஸ்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்த அந்த இரும்புப் பெண்மணியின் சாவிலேயே சந்தேகம் தெரிவித்தார்கள்.
75 நாட்கள் மருத்துவமனையிலேயே காவல் காத்து, அவ்வப்போது, ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்று மீடியாக்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்த அமைச்சர்களே இந்தச் சந்தேகத்தை எழுப்பினார்கள்.
மாநில ஆளுநர், மத்திய அமைச்சர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரையும் இவர்கள் சந்தேகக் கூண்டில் நிறுத்தினார்கள். ஆனால், அவர்கள் மட்டும் அந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க நினைத்தார்கள்.
எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை மட்டுமே சிக்க வைக்கும் குறுகிய நோக்கத்தில் இவர்கள் யோக்கியர்களாக வேஷம் போட்டது வெட்ட வெளிச்சமாகத்தான் போகிறது.
அதற்கிடையே, இப்போது, அம்மாவின் பேரை நாரடித்துவிட்டு, இப்போ ரொம்ப நல்ல பிள்ளைகளாய் சட்டமன்றத்தில் படம் திறக்கிறார்கள். இந்த படத்தை திறந்துவைக்க மோடியைக் கூப்பிட்டாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை கூப்பிட்டாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் கூப்பிட்டாக, பக்கத்து மாநில முதல்வர்களையெல்லாம் கூப்பிட்டாக…
ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் திறக்க வேண்டிய படத்தை சட்டமன்றத்தில் திறப்பதா என்று பதறிப்போய் மறுத்துவிட்டார்கள். இத்தனை நாள் காத்திருந்து, ஆட்சி முடிவதற்குள் தாங்களே திறந்து வைக்க முடிவு செய்தார்கள்.
தமிழக எதிர்க்கட்சிகள் யாருமே வரவேற்காத நிலையில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் அறுதிப் பெரும்பான்மைக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் மைனாரிட்டி எண்ணிக்கை உறுப்பினர்களே பங்கேற்று ஜெயலலிதா படத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.
கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று, உயிரோடு இருந்திருந்தால் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டியவர் ஜெயலலிதா. அவருடைய படத்தை சட்டமன்றத்தின் மரபை மீறி சபாநாயகரே திறந்து வைத்திருப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.
அரசுத் திட்டங்களிலும், அரசு விழாக்களிலும், அரசு அலுவலகங்களிலும் ஜெயலலிதா படம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு அதன்மீது தீர்ப்பு வரவேண்டியிருக்கிறது. அதற்குள் இப்போது சட்டமன்றத்திலேயே அவருடைய படத்தை திறந்து வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
இந்த நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்திருக்கிறார். ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஒரு குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருப்பது தமிழ்நாட்டின் அவமானம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.