மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் குறித்த தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்
ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை, எந்த அதிகாரமும் இல்லை என்பதைத் தான் நீண்ட காலமாக நாம் சொல்லி வருகிறோம். அதை இப்போது ஆளுநரும் ஒப்புக்கொண்டுள்ளார். இப்போதுதான் அவருக்கு உண்மை போதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நிரந்தரமா என்பது தெரியவில்லை. அதிகாரம் இல்லை என்று சொல்லும் ஆளுநர்தான் இவ்வளவு மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே மதம் என்று பேசுவதன் மூலம் சனாதனத்தை இவர்கள் பல்வேறு வழிகளில் புகுத்துகிறார்கள். இவர்களுக்கு எப்போதும் ஒரே கருத்துதான்.
மோடியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. அண்ணாமலையால் முடியுமா? அவர் எங்கு வேண்டுமானாலும் நடைப்பயணம் மேற்கொள்ளட்டும். தன்னை ராகுல் காந்தி போல் கற்பனை செய்துகொள்கிறார் அண்ணாமலை. இவ்வளவு கொடுமைகள் நடந்த மணிப்பூருக்குச் செல்லாத மோடி, அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார் என்றால் என்ன அர்த்தம்? என்ன செய்தாலும் அவர்களால் இங்கு ஒன்றும் சாதிக்க முடியாது.
பாஜகவின் பிம்பம் மொத்தமாக உடைந்துவிட்டது. ஆரம்பத்தில் அண்ணாமலையின் பேட்டிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. இன்று அண்ணாமலையின் பேட்டிகள் காமெடிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. அப்படிச் சொல்லிவிட்டு அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார்? காலில் விழுந்துதான் அவர் பதவியே பெற்றார். பாஜக என்ன செய்தாலும் அதை எதிர்த்துப் பேச அதிமுகவுக்கு தைரியம் இல்லை.
மணிப்பூர் விவகாரத்தில் 79 நாட்கள் கழித்து பிரதமர் மோடி முதலைக்கண்ணீர் வடித்திருக்கிறார் என்று டெலிகிராஃப் பத்திரிகை கூட எழுதியது. வெறும் 30 வினாடிகள் மட்டும்தான் பிரதமர் இதுகுறித்து பேசினார். இந்த விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறது. பிரதமர் இன்று வரை மணிப்பூர் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. மெய்தேய் இனப் பெண்களுக்கு ஆபத்து என்று இவர்கள் பரப்பிய போலி வீடியோதான் மணிப்பூரில் நடைபெற்ற அத்தனை கலவரங்களுக்கும் காரணம்.
இதைத் தூண்டிவிட்டது பாஜக தான். மணிப்பூரில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே இதைத் தீர்த்துவைக்கச் சொல்லி உள்துறை அமைச்சரை சந்தித்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. வெறும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தையே இவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. குக்கி இன மக்களின் மீது இவர்கள் தொடர்ந்து கட்டமைத்து வந்த வெறுப்பு ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. அங்கு இண்டர்நெட் துண்டிக்கப்பட்டதால் வீடியோ வெளிவர தாமதமானது. அது வெளிவந்த பிறகு நாடே கொந்தளிக்கிறது. வீடியோ மட்டும் வரவில்லை என்றால் பிரதமர் இதுகுறித்து பேசியிருக்க மாட்டார்.
இப்போதும் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க பாஜக தயாராக இல்லை. குஜராத் கலவரம் போல் மணிப்பூர் கலவரத்தையும் திட்டமிட்டு பாஜக செய்துள்ளது. 200-க்கும் அதிகமான குக்கி இன மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு நடந்த பிறகும் அங்குள்ள பாஜக ஆட்சியை இவர்கள் கலைக்கவில்லை.