கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ‘’எங்கள் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வுகளில் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுப்பிடிப்பதில் 70 சதவீத இலக்கை அடைந்துள்ளோம். அடுத்த கட்ட நகர்வுகளில் முழுமையான வெற்றி கிடைக்கும்‘’ என கடந்த மாதம் பிரகடனப்படுத்தினார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதாசேசையன்.
இவருடைய பிரகடனம் உலக அளவில் எதிரொலித்தது. இந்திய மருத்துவ உலகமோ, சுதாசேசையனை நிமிர்ந்து ஆச்சரியத்துடன் பார்த்தது. இப்படிப்பட்ட சூழலில், பல்கலைக்கழகத்தில் கடந்த 40 நாட்களாக எவ்வித ஆராய்ச்சிகளும் நடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் தமிழக சுகாதாரத்துறையில் தற்போது எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்தத் தகவல் நமக்கு கிடைத்த நிலையில், தமிழக சுகாதாரத் துறையிலும் பல்கலைக்கழக வட்டாரங்களிலும் ரகசியமாக விசாரித்தோம்.
நம்மிடம் மனம் திறந்த சுகாதாரத்துறையின் நேர்மையான அதிகாரிகள் சிலர், ‘’எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் கடந்த மாதம் பேட்டியளித்த துணைவேந்தர் சுதாசேசையன், ‘கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்கலைக்கழகம் ஈடுப்பட்டுள்ளது. வைரஸை வளர்த்து அதை ஆய்வுக்குட்படுத்தி தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் முறை இங்குள்ளது. ஆனால், தற்போது கரோனா வைரஸை ஆய்வுக்கூடத்தில் வளர்ப்பது ஆபத்து என்பதால், நடைமுறையிலுள்ள ரிவர்ஸ் வேக்ஸனாலஜி முறையைப் பயன்படுத்தி, வைரஸின் மரபணுவை மட்டும் பிரித்தெடுத்து, அதனை ஆய்வு செய்து தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, வைரஸின் மரபணு தொடரை கணினி முறையில் பல பெர்மிடேஷன் காம்பிடேஷன் போட்டுப் பார்த்து, ரிவர்ஸ் வேக்ஸ் டெக்னாலஜியில் இந்தத் தடுப்பு மருந்து வேலை செய்யும் என்கிற கண்டுபிடிப்பை முதல் கட்ட முயற்சியில் கண்டுபிடித்திருக்கிறோம். இதில், பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மற்றும் நோய் பரவியல் துறை சார்ந்த டாக்டர்கள் ஈடுப்பட்டனர்.
குறிப்பாக, நோய் எதிர்ப்பியல் மற்றும் நோய் உயிரியியல் துறைகளின் தலைவர் டாக்டர் விஸ்வாத், நோய் பரவியியல் துறை தலைவர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர்களின் வழிகாட்டுதலில் தடுப்பு மருந்துக்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதில், டாக்டர் புஷ்கலாஸ்ரீனிவாஸ், ஆராய்ச்சி மாணவர் தமன்ன பஜந்திரி ஆகியோருடன் நானும் இணைந்து உதவிகளை செய்தோம். நாங்கள் இணைந்து தடுப்பு மருந்துக்கான மாதிரியை கண்டுபிடித்துள்ளோம். அதன்படி, சார்ஸ் என்கோவி 2 தடுக்கக்கூடிய ஒரு சிந்தெட்டிக் பாலி வெப்டைலை உருவாக்கியிருக்கிறோம். அதற்கு நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை.
இது முதல் கட்டம்தான். இன்னும் பல படி நிலைகள் இருக்கின்றன. அதற்கு ரெகினேட்டர் ஏஜென்சியிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும். எங்களுடைய இந்த முதற்கட்ட முயற்சியிலேயே 70 சதவீத சரியான தடுப்பு மருந்துக்கான அடையாளம் கிடைத்துள்ளது. அடுத்தக்கட்ட நடிக்கைகளில்தான் முழுமையான தடுப்பு மருந்து என்பதை நடைமுறைக்கு கொண்டு வர முடியும். முதல் முயற்சியிலேயே பாசிட்டிவ்வான ரிசல்ட் கிடைத்திருப்பதால் கரோனா நோயைத் தடுப்பதற்கும், உலகில் அமைதியைக் கொண்டு வருவதற்கும் எங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்வோம். அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என பிரகடனப்படுத்தியிருந்தார் சுதாசேசையன்.
ஆனால், நாற்பது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எந்த ஆராய்ச்சியும் நடக்கவில்லை. முதல் கட்டமாக 70 சதவீத இலக்கை அடைந்துள்ளோம் என்பதற்குக் கூட தெளிவான ரிசல்ட் அங்கு இல்லை. ஒரு வேளை சுதாசேசையன் அறிவிப்பினை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொண்டாலும், அதனை அவர் அறிவித்திருக்கக் கூடாது. தமிழக முதலமைச்சரோ, துறையின் அமைச்சரோ அல்லது துறையின் செயலாளரோ தான் அதனை முதலில் அறிவிக்க வேண்டும். ஏனெனில், சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளுக்கு அரசுதான் பொறுப்பு. அதனால், தவறுகள் ஏதேனும் நடந்தால் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில், தமிழகத்தில் எயிட்ஸ் நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார் டாக்டர் சுனிதி சாலமன். இதனைத் துறையின் அமைச்சர் ஹண்டே மூலம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்கொண்டு போனார் சுனிதிசாலமன். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், சட்டமன்றத்தில் இதனை அறிவிக்குமாறு ஹண்டேவுக்கு அனுமதி தந்தார் எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், சுதாசேசையனின் தன்னிச்சையான அறிவிப்பு இப்போது வரை சர்ச்சையில்தான் இருக்கிறது. அப்படிப்பட்டவர், கரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்கு ஏன் நகர்த்தவில்லை?
இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளில், கரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு (போஸ்ட்மார்டம்) ஆய்வு செய்து இறப்புக்கான காரணங்களை முறைப்படி அறிவிக்கின்றன. அதேபோல, தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை போஸ்ட்மார்டம் செய்து அந்த அறிக்கையினை துணைவேந்தர் சுதாசேசையன் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் ஒருவேளை தமிழகத்தின் இறப்பு எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏன், அவர் செய்ய முன்வரவில்லை? ’’ என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.
மருத்துவப் பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’அரசு ஆய்வகங்களில் அதிக அளவில் பரிசோதனைகள் நடக்கின்றன. ஆனால், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஒரு நாளைக்கு 100 பரிசோதனைகள் மட்டுமே நடக்கிறது. அதனையும் வேண்டா வெறுப்பாகச் செய்கின்றனர். அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் சுதாசேசையன் அனாட்டாமி பேராசிரியர்தான். ஆனால், அவரோ, மைக்ரோபயாலஜி, வைராலஜி உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சியாளர் போல, கரோனாவை அழிக்க 70 சதவீதம் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவதை எப்படி மருத்துவ உலகம் ஏற்கிறது எனத் தெரியவில்லை.
இன்னும் சொல்லப்போனால், தடுப்பு மருந்துக்கான முதல் கட்ட ஆராய்ச்சியில் சில டாக்டர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் துணைவேந்தர். இதுவரை எந்தத் தலைப்பிலும் எந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையும் சமர்பித்ததாகத் தகவல் கிடையாது. இணையத் தளங்களில் ஏற்கனவே வெளிவந்துள்ள தகவல்களைதான் தமிழில் மொழிப்பெயர்த்து தந்திருக்கிறார்கள். நிர்வாக ரீதியிலான பணிகளில் ஈடுப்பட்டிருப்பதைத் தவிர ஆராய்ச்சிப் பணிகளில் இல்லை.
பொதுவாக, பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவப் பேராசிரியர்கள், உலக அளவிலோ அல்லது மாநில அளவிலோ நடக்கும் மருத்துவ ஆராய்ச்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்பித்ததற்கான சான்றுகள் எதுவுமே கிடையாது. பல்கலைக்கழக இணையத்தளத்திலும் அதற்கான தகவல்கள் இல்லை. சர்வதேச மருத்துவ இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளதற்கான அடையாளம் கூட இல்லை. இவர்கள் எப்படி, கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியும்?‘’ எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது குறித்து சுதாசேசையனின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவே இல்லை.