உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 57 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கரூர் எம்பி ஜோதிமணி பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பான கேள்விக்கு வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பிரதமர் பற்றியும், ஆளும் அரசைப் பற்றியும் ஒரு கருத்து முன்வைக்கிறார். அதற்கு எதிர்விமர்சனம் வைத்த பா.ஜ.க.வை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் கரு.நாகராஜன் ஜோதிமணி குறித்து ஒரு தவறான வார்த்தையை உபயோகிக்கிறார். ஒரு பிரதமரை இப்படிப் பேசலாமா என்று ஜோதிமணிக்கு எதிர் தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பிரதமரைப் பற்றியோ அல்லது அவர்களின் கட்சியைப் பற்றியோ யாரும் பேசக்கூடாது என்பதே பா.ஜ.க. மற்றும் அவர்களது ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்ளும் நபர்கள் அமைத்துள்ள திட்டம். அந்தத் திட்டத்தின் படி இந்த அரசையோ அரசில் இருக்கும் அமைச்சர்களையோ யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அந்த விவாதத்தில் என்ன சொல்லியிருகிறார்கள், நாங்கள் எல்லாம் மக்களோடு மக்களாக இருக்கின்றோம். அவர்களுக்குத் தேவையானவற்றைத் தந்து கொண்டு இருக்கின்றோம். நாங்கள் அப்படிச் செய்து கொண்டு இருப்பதால்தான் மக்கள் உங்களைக் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மக்கள் பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் என்பதை அவர் அந்த சொல்லின் மூலம் கூற வருகிறார். இது எப்படி வன்முறையைத் தூண்டுகின்ற பேச்சாக மாறும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். இந்த வார்த்தையை ஒரு ஆண் கூறியிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள். இதை இரண்டு வகைகளில் நாம் பார்க்க வேண்டும். ஒன்று எதிர்கேள்வி வைப்பவர்களை தாக்குதல் மூலம் பேசமால் இருக்க வைக்கும் பாசிச புத்தி, மற்றொன்று பெண் என்பதால் தனிபட்ட முறையில் அத்துமீறி பேசும் முறை. இது இரண்டையும் அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.
எல்லா கட்சியில் இருப்பவர்கள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதே? தமிழிசையில் ஆரம்பித்து நிர்மலா சீதாராமன், கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றதே?
விமர்சனங்கள் வந்துகொண்டே தான் இருக்கும். தமிழிசை பற்றி அவர்களின் தோற்றம் பற்றி விமர்சனம் வருகின்ற போது நாங்கள் எல்லாம் ரொம்ப வருத்தப்படுவோம். எங்களுக்கு தெரிந்த நபர் அவ்வாறு விமர்சனம் செய்தால் அவர்களிடம் நாங்கள் அவ்வாறு செய்யாதீர்கள் என்று கூறுவோம். இது கூட அவர்கள் தோற்றத்தைப் பற்றி விமர்சனம் தானே கேரக்டர் பற்றிய விமர்சனம் அல்ல. இருந்தாலும் அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். குறைந்த பட்சம் பா.ஜ.க. தரப்பில் இருந்து இந்த விஷயத்துக்கு அவரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்களா? குறைந்தது கண்டனமாவது இவர்களை மாதிரியான ஆட்களுக்குத் தெரிவித்துள்ளார்களா? அல்லது மகளிர் அணியினராவது கண்டனம் தெரிவித்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளது எல்லாம் பொதுப்படையான கருத்து, நேரடி கண்டனங்கள் தெரிவித்துள்ளார்களா என்பதுதான் இங்கு பார்க்கப்பட வேண்டும்.