அதிமுகவின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் நவ.6ஆம் தேதி புதன்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8.15 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டபோது, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் கடுமையாக பாடுபட்டீர்கள். அதற்கு நன்றி தெரிவிக்கிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் இருக்க வேண்டாம். அந்த இரண்டு தொகுதியிலும் எப்படி வேலை செய்தோமோ அதே உற்சாகத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் வேலை செய்ய வேண்டும். நாளையில் இருந்தே அதற்கான பணிகளை தொடங்குங்கள் என்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள்.
சென்னை மாநகராட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள தேர்தல் பணியினை மும்முரமாக செய்ய வேண்டும் என்றும், திமுகவுக்கு நிகராக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் தலைமை விரும்புகிறது. ஆகையால் இதில் கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள்.
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள் சிலர், கூட்டணிக்கு எந்தெந்த இடங்களை ஒதுக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள், ''அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்களை சமாதானம் செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு. இப்போதைக்கு மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பகுதியில் எந்தெந்த பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று பட்டியல் தயார் செய்து தலைமைக்கு அனுப்புங்கள். அதனை கட்சி தலைமை பரிசீலித்து உங்களிடமும் ஆலோசனை நடத்தி வேட்பாளரை தேர்வு செய்வோம்'' என்று மாவட்டச் செயலாளர்களை அனுப்பி வைத்தனர்.
கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளை அனுப்பிவிட்டு, கட்சியின் சீனியர்கள் மட்டும் வைத்துக்கொண்டு பின்னர் ஆலோசனையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆலோசனையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் அதிமுக வெற்றி வாய்ப்புக்கு இரண்டு யோசனையை தெரிவித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டாம். இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு கட்டங்களாக நடத்தலாம் என்பதுதான் அது. அப்படி நடத்தினால்தான் சுலபமாக திமுகவை தோற்கடிக்க முடியும். அதிமுக வெற்றி பெற இதுவே வழி என்று கூறினாராம்.
மேலும் இன்னொன்று, மேயர் பதவி மற்றும் நகராட்சி தலைவர் பதவியை தற்போது மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை மாற்றி மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்க வைக்கலாம். இந்த முறையை கொண்டு வந்தால் நமக்குத்தான் நல்லது. அதிமுக அதிக இடங்களை பிடிக்காவிட்டாலும், சுயேட்சை வேட்பாளர்கள் உதவியோடு மேயர் பதவி மற்றும் நகராட்சி தலைவர் பதவியை நாம் கைப்பற்றலாம் என்று கூறினாராம்.
இதற்கு கட்சியின் சீனியர்கள் பலர் சம்மதம் தெரிவித்திருக்கின்னர். இதே விசயத்தை அடுத்த நாள் நவ.7ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சீனியர் அமைச்சர்களிடம் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு அமைச்சர்களும் இந்த முறையை நடைமுறைப்படுத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளனராம்.
அதிமுகவின் இந்த வியூகம் குறித்து திமுகவுக்கு எட்டியிருக்கிறது. அதிமுகவின் இந்த வியூகத்தை முறியடிப்பது குறித்து வரும் 11ம் தேதி நடக்கும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.